தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகள் யார் யார் தெரியுமா?
By Arul Valan Arasu | Galatta | August 23, 2019 12:00 PM IST
தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவும் அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. இந்த திருவிழாக்களின்போது, மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இலங்கை வழியாகத் தமிழகத்திற்குள் 6 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகள் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், மீதமுள்ள 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று, அவர்கள் 5 பேரும் இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தமிழக டிஜிபிக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உச்சக்கட்ட பதற்றத்துடன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. மேலும், கோவை முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல், நள்ளிரவு முதல், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது