அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நேற்று முன் தினம் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, புதன் கிழமை இரவு அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5 நாட்கள் ப.சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ப.சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். 

இதனிடையே, ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பானுமதி போபண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜரானார்.

Chidambaram

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் வரும் 26 ஆம் தேதி வரை கைது செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். அத்துடன், வரும் 26 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chidambaram

இதனிடையே, ஐ.என்.எக்ஸ். முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சிபிஐ நேற்று முதல் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வரும் 26 ஆம் தேதி வரை ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளின் கஸ்டடியில் இருந்தாக வேண்டும். இதனால், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்கால முன் ஜாமீனால், அவருக்குப் பெரிதாகப் பலன் கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் வரும் 26 ஆம் தேதிக்குப் பிறகு முன் ஜாமீன் கிடைத்திருந்தால், அது பலனளிக்கக் கூடும் என்றும் வழக்கறிஞர் தரப்பினர் கருதுகின்றனர்.