ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, பிற்பகல் முதல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையானது சினிமா பாணியில் நடந்தது. வழக்கில் இன்று தொடக்கம் முதல் தற்போது வரை என்ன நடந்தது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Chidambaram

டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்ற அறையில் வழக்கறிஞர் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் கார்த்தி சிதம்பரத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியபோது, ப.சிதம்பரம் நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டார். அப்போது, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞரும், சிபிஐ தரப்பு வழக்கறிஞரும் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

கபில் சிபல் : வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் ஜாமினில் உள்ளார், மற்றொருவரான பட்டய கணக்காளர் பாஸ்கரன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல் கொடுத்த 6 துறைச் செயலர்கள் கைது செய்யப்படவில்லை. இதில், ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். மேலும், விசாரிப்பதற்குத் தேவை இருந்தால் மீண்டும் அழைத்திருக்கலாம்.

Chidambaram

சி.பி.ஐ. அழைப்பைச் சிதம்பரம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. இதெல்லாம் நடந்துள்ளது என சி.பி.ஐ கூறுவதெல்லாம் சத்திய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது அல்ல. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சிபிஐ தரப்பினர் சமர்ப்பிக்கட்டும். அப்போது, ப.சிதம்பரம் ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். நேற்று இரவே விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் 12 கேள்விகள் மட்டுமே அதிகாரிகள் கேட்டுள்ளனர். இப்போதும் கூட விசாரிக்க வேண்டும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்களிடம் வேறு எந்த கேள்விகளும் கேட்பதற்கு இல்லை.

குறிப்பாக நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள், சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்த போது, சிதம்பரத்திடம் விசாரித்திருக்கலாம். ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்தபோது கூட விசாரிக்கவில்லை. அப்பொழுதெல்லாம் விசாரிக்காமலிருந்ததற்கு காரணம் என்ன? குறிப்பாக ப.சிதம்பரம், பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், முன் ஜாமீன் மனு மீது 7 மாதங்களுக்குப் பிறகு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் அந்த பாதுகாப்பு வளையமா?

விசாரணை நடைபெற்றபோது வழக்கு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது எல்லாம் ஆதாரமில்லை, அவையெல்லாம் விசாரணைக்கு உதவும் அம்சங்களே. அதே நேரத்தில் சிதம்பரத்தை நடத்திய விதம் கடும் கண்டனத்திற்குரியது.

அபிஷேக் மனு சிங்வி : இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே ப.சிதம்பரம் விசாரணைக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணி அப்ரூவரவாக மாறியதால் தான், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அப்ரூவராக மாறி தற்போது அவர் சொன்னதை, கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே சொல்லியிருக்கிறார். கேள்விகளுக்குப் பதில் தராமல் தப்பிக்கிறார் என்ற காரணத்துக்காக மட்டுமே சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், ஒத்துழைப்பு தராதவர் என்றால், சிபிஐ அழைத்தபோதெல்லாம் ஏன் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்?

அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்?

அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதில் தர மறுக்கிறார் என்பதற்கெல்லாம், காவலில் எடுத்து விசாரிக்க கோர முடியுமா?

Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது மொத்தம் 6 பேர். ஆனால், அந்த 6 செயலர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அதில் ஒரு செயலாளர் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ஆகிவிட்டார். ப.சிதம்பரம், சாட்சியங்களை அழிக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டை சி.பி.ஐ முன் வைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் காவலில் எடுத்து விசாரிப்பது தேவையற்றது. ப.சிதம்பரத்திற்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லாதபோது அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கக் கூடாது.

குறிப்பாக ஒத்துழைப்பு தராமை , சாட்சியங்களை அழிக்க முயல்தல், தப்பிச் செல்லுதல் ஆகிய 3 விஷயங்களுமே, ப.சிதம்பரத்தின் வழக்கில் இல்லை என்கிறபோது, கைது நடவடிக்கை அவசியமற்ற ஒன்று. இந்த வழக்கில் பழைய பல்லவியே பாடப்பட்டு வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக புதிய திருப்பங்களோ ஆதாரங்களோ சிபிஐ வசம் இல்லை. இந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் கஸ்டடி கேட்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? சி.பி.ஐ.க்கு தேவை சிதம்பரத்தின் பதிலா ? அல்லது அவர்கள் விரும்பும் பதிலா ?

அப்போது...

சிபிஐ வழக்கறிஞர் துஷர் மேத்தா மற்றும் ப.சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது.

அபிஷேக் மனு சிங்வி : சிபிஐக்கு தேவை சிதம்பரத்தின் பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பதில்.

துஷர் மேத்தா : விசாரணையைத் துரிதப்படுத்தச் சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தே ஆகவேண்டும்.

அபிஷேக் மனு சிங்வி : குற்றம்சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரம் உங்கள் முன்னால் தான் இருக்கிறார், வேண்டுமெனில் அவரிடம் இப்போதே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

துஷர் மேத்தா : இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிதம்பரம் பேசக்கூடாது. சிதம்பரத்தை வெளியிலிருந்து பாதுகாப்பவர்களிடமிருந்து அவரை விலக்கி வைத்துக் காவலில் விசாரித்தால் தான், உண்மை வெளிவரும்.

அபிஷேக் மனு சிங்வி : தேவையான கேள்விகளைச் சிதம்பரத்திடம் நீதிபதியே நேரடியாகக் கேட்கலாம்.

துஷர் மேத்தா : சிதம்பரத்தைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு வளையத்தை நீக்காமல், எங்களால் உண்மையை நெருங்க முடியாது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது , காவலில் எடுத்து விசாரிக்க கோருவது சிபிஐ அதிகாரிகளின் உரிமை. இந்த வழக்கில், அதற்கான தேவையும் உள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் என்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ ப.சிதம்பரத்திற்குச் சலுகைகள் வழங்க முடியாது.

அப்போது, ப.சிதம்பரத்தை நீதிபதி பேச அனுமதித்தார்.

ப.சிதம்பரம் : எனக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்கு உள்ளதா எனக் கேட்டார்கள். என் மகனுக்கு உள்ளதா? எனக் கேட்டார்கள். என் மகன் தொடர்பாக, அதிகாரிகள் என்னிடம் கேட்ட கேள்விகள் குறித்து என் மகனே பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து, தீர்ப்புக்காக வழக்கு விசாரணை சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.