சிக்கலில் சிக்கித் தவிக்கும் நிர்மலா சீதாராமன்!
By Arul Valan Arasu | Galatta | August 23, 2019 15:42 PM IST
இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் சந்திக்காத ஒரு மாபெரும் பொருளாதார மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2013ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாய் என்று இருந்தது. ஆனால், இதையே பொருளாதார மந்த நிலை என்று விமர்சனம் செய்த பாஜக, தேர்தலில் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. ஆனாலும், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் சரிந்து, இன்று வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்த நிலையில், தற்போதைய பாஜக ஆட்சியில், நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக இருந்து வருகிறார். ஆனால், அவருடைய போதாத காலம் போல், இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் சந்திக்காத ஒரு மாபெரும் பொருளாதார மந்த நிலையை தற்போது சந்தித்து வருகிறது. இதனால், பல நிறுவனங்கள் வேலையாட்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.
நாட்டின் தொடர் பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் சிக்கலில் தவித்து வருகிறார். இதனால், அவருக்கு மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில முக்கிய முடிவுகளை அதிரடியாக எடுக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக இன்று மாலை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய நிதித்துறை சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடக்கயிருக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் முக்கிய பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள் என்று கருதப்படுகிறது. கூட்டத்திற்கு முன்போ அல்லது பின்போ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, சில அதிரடியான அறிவிப்புக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.