“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை...” என்ற பழமொழிகள் எல்லாம் அழிந்து, புதிய மொழிகள் எழுதப்பட்டு வருகின்றன. அதற்கு உதாரணங்கள் சொல்லும் வகையில்தான், நம் சமுகத்தில் அன்றாடம் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதற்கு உதாரணம் சொல்லும் ஒரு சம்பவம் தான் மதுரை அருகே நடந்த இந்த சம்பவமும்...

Ranjitha

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சருகுவலையபட்டியை சேர்ந்த ரஞ்சிதா - ராகவானந்தம் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளன. வேலைக்கா ராகவானந்தம், வெளிநாடு சென்றுவிட்டார். இதனையடுத்து ரஞ்சிதாவிற்கும், அரிட்டாப்பட்டியைச் சேர்ந்த கல்யாணகுமாருக்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் கள்ளக் காதல் பெரிதாக வளர்ந்த நிலையில், தங்களது கள்ளக் காதலுக்கு, தன்னுடைய 3 குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக எண்ணிய தாய் ரஞ்சிதா, 3 குழந்தைகளுக்கும் பிஸ்கட்டில் எலி மருந்து தடவிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து, மயக்கம் அடைந்த 3 குழந்தைகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பார்கவி, யுவராஜா ஆகிய குழந்தைகள் உயிரிழந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கிரிபாலன் என்ற குழந்தை மட்டும் உயிர் தப்பினான்.

இதனையடுத்து, தனது குழந்தைகளுக்கு யாரோ எலி மருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்துக் கொன்றதாக, தாய் ரஞ்சிதா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, தனது குழந்தைகள் இறந்த செய்தி கேட்டு, வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய ராகவானந்தம், உயிர் பிழைத்த தனது மகன் கிரிபாலனிடம் “என்ன நடந்துள்ளது” என்று விசாரித்துள்ளார். அப்போது, “தாய் ரஞ்சிதாவும், கல்யாண்குமார் என்பவரும் சேர்ந்து தங்களுக்கு எலிமருந்து தடவிய பிஸ்கட்களை சாப்பிடக் கொடுத்ததாகவும், அந்த பிஸ்கட்டை சாப்பிட்டபோது, கசப்பாக இருந்ததால் தாம் அதைக் கீழே துப்பிவிட்டதால் தான் உயிர் தப்பியதாகவும்” சிறுவன் தெரிவித்துள்ளான்.

Rajintha kalyanakumar

இது தொடர்பாக ராகவானந்தம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி சந்தேக மரணம் என்ற அந்த வழக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு, போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக, தனது குழந்தைக்குத் தாயே எலி மருந்து கலந்துகொடுத்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய் ரஞ்சிதாவையும், அவரது கள்ளக் காதலன் கல்யாணகுமாரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், “தனது கள்ளக் காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால், தாங்கள் இருவரும் திட்டமிட்டுக் கடந்த 2016 ஆம் ஆண்டு, அக்டோபர் 10 ஆம் தேதி 3 குழந்தைகளுக்கும் எலிமருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்துக் கொன்றதாக” தாய் ரஞ்சிதா ஒப்புக்கொண்டுள்ளார். இதில் ஒரு குழந்தை மட்டும் உயிர்பிழைத்து, சாட்சி கூறிய நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.