காஞ்சிபுரத்தில் குண்டு வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது!
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 13:52 PM IST
காஞ்சிபுரத்தில் ராக்கெட் லாஞசர் குண்டு வெடிக்க வைத்து அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதியில் உள்ள கங்கையம்மன் கோயில் ஏரிக்கரையில், சமீபத்தில் ராக்கெட் லாஞசர் குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இந்த ராக்கெட் லாஞசர் குண்டு பயன்படுத்தப்படாமல், பல ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் காயாரில் உள்ள காவலர் வெடிகுண்டு பயிற்சி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட ராக்கெட் லாஞசர், மீண்டும் மானாம்பதி ஏரிக்கே எடுத்து வரப்பட்டது.
அங்கு, சுமார் 5 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. அதற்கிடையில், மூட்டைகளுக்கு இடையே ராக்கெட் லாஞ்சர் குண்டை வைத்து, அதனை ரிமோட் மூலம் பொருத்தி உள்ளனர்.
தொடர்ந்து, மானாம்பதி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வராத வண்ணம் பார்த்துக்கொண்டனர். இதனையடுத்து, வெடிகுண்டு வைக்கப்பட்ட இடத்திலிருந்து நீண்ட தூரம் பயணித்து, பாதுகாப்பான இடத்திற்குச் சென்ற பிறகு, ரிமோட் மூலம் அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிக்க வைத்து அழித்தனர். மேலும், அப்பகுதியில், வேறு ஏதேனும் வெடிகுண்டு புதைக்கப்பட்டிருக்கிறதா என்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதனிடையே, அப்பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் குளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு , வெடிபொருள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் இன்று வெடிகுண்டு வெடிக்க வைத்து அழிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.