ஆயா முதல் ஆட்டோ வரை ஆங்கில மோகம் ஏன்? - சகாயம் IAS ஆவேசம்
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 12:29 PM IST
தமிழர்களின் ஆங்கில மோகம் வேதனை அளிக்கிறது என்று சகாயம் IAS வேதனை தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்ச்சங்கம் சார்பில் 'மாத்தமிழுக்கு மாபெரும் விழா' என்ற தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. இதில், சகாயம் IAS அவர்கள் கலந்துகொண்டு, “தமிழுக்காக வாழ்வோம், தமிழாய் வாழ்வோம்” என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது, “தமிழர்களின் உளவியலில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆங்கில மோகம் , ஆயா முதல் ஆட்டோ ஓட்டுநர் வரை சென்று தமிழர்களின் உளவியலை முற்றிலுமாக சிதைத்துள்ளது. இது, எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஆங்கில மோகத்தை நாம் அகற்ற வேண்டும். அதே சமயம், ஆங்கில ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழின் பயன்பாட்டுத் தரவில் நம் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, உறவுகளை அழைப்பது, உரையாடல்களில் அந்நிய மொழியை அகற்றுவது, கையெழுத்து இடுவது என அனைத்திலும் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.
தமிழர்கள் அனைத்து மொழியையும் எளிதில் கற்கக்கூடியவர்கள், தேவைக்கேற்ப கற்றுக்கொள்ளக்கூடிய திறமை மிக்கவர்கள். மாறாக, மொழியை வேண்டும் என்றே திட்டமிட்டுத் திணிக்கக்கூடாது” என்று ஆவேசமாகப் பேசினார். தற்போது, அவரது பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.