தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கு நாளை முதல் முன்பதிவு..!
By Arul Valan Arasu | Galatta | August 26, 2019 15:03 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்தில் சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்காக நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையானது இந்த வருடம் வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வருகிறது. அதனால், அந்த வாரத்தின் கடைசி வேலை நாளான 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே சொந்த ஊருக்குச் செல்பவர்கள் கிளம்பிவிடுவார்கள்.
தீபாவளி பண்டிகைக்காகத் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளிலேயே பயணம் செய்வார்கள்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கா சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், நெல்லை, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கும் தமிழக அரசு சார்பில், ஆயிரத்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய முடியும்.
இதனால், அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்காக அக்டோபர் 25-ந்தேதி சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு நாளை முதல் முன்பதிவு தொடங்குகிறது. மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com ஆகிய இணைய தளங்கள் வழியாகவும், பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.