சைக்கிளுக்கு ஹெல்மெட் கேட்டு சிறுவனை டார்ச்சர் செய்த போலீஸ்!
By Arul Valan Arasu | Galatta | September 17, 2019 12:12 PM IST
வைரல் வீடியோ... ஹெல்மெட் கேட்டு சிறுவனின் சைக்கிளை போலீசார் ஒருவர் பிடுங்கி வைத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் புதிய சாலை போக்குவரத்து விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தருமபுரி பென்னாகரம் அடுத்த ஏரியூர் காவல்நிலையத்திற்கு உட்பட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பள்ளி மாணவன் ஒருவன், அரசு வழங்கிய இலவச சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, குறுக்கே வந்து நின்று அந்த சிறுவனை வழிமறித்த போலீஸ்காரர் ஒருவர், ஏதோ திருடனைப் பிடித்ததுபோல் பாவனை செய்துள்ளார். சிறுவனிடம் எதுவுமே பேசாமல், சைக்கிளுக்குப் பூட்டுப்போட்டு, சைக்கிளை ஓரமாக எடுத்துக்கொண்டு சென்று வைத்துவிட்டார்.
ஏன் தனது சைக்கிளுக்கு போலீஸ்காரர் பூட்டுப்போடுகிறார் என்று எதுவுமே தெரியாமல், அந்த பள்ளி மாணவன் திருதிருவென்று முழிக்கிறான். பிறகு, அருகிலிருந்தவர்களிடம் சொல்போனை வாங்கி, தனது வீட்டினருக்கு, போலீசாரின் நடவடிக்கை பற்றி புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, சுமார் ஒரு மணி நேரமாகச் சிறுவனைக் காக்க வைத்த போலீஸ்காரர், அதன் பின்னர் சிறுவனிடம் சைக்கிளைக் கொடுத்து, அவனை விடுவித்துள்ளனர். தற்போது போலீஸ்சார், சிறுவனிடம் சைக்கிளை பிடுங்கி வைத்துக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.