தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
By Arul Valan Arasu | Galatta | August 26, 2019 12:00 PM IST
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் வகையில் அரசுக் கல்வி தொலைக்காட்சி புதிதாகத் திட்டமிடப்பட்டது. இந்த தொலைக்காட்சிக்கு ஸ்டூடியோ மற்றும் அலுவலகமானது, அண்ணா நூலகத்தின் 8 வது தளத்தில் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகத் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி, சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதன்படி, அரசு கேபிள்களில் 200 வது எண்ணில், இந்த சேனல் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.
கல்வி தொலைக்காட்சியைத் தொடங்கப்பட்டதை முன்னிட்டு. இன்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை, பள்ளிகளிலேயே மாணவர்கள் நேரடியாக நிகழ்ச்சிகளைக் காணும் வகையில்,53 ஆயிரம் பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சியை ஒளிபரப்ப பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தொலைக்காட்சி மூலம் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன. மேலும், கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், சுயத்தொழில், வேலைவாய்ப்பு போன்றவையும் ஒளிபரப்பப்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மாணவர்வகளுகு்கு தேவையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.