குகையில் வாழ்ந்த கைதி 17 வருடங்களுக்குப் பிறகு கைது!
By Arul Valan Arasu | Galatta | October 01, 2019 12:41 PM IST
சிறைச்சாலையிலிருந்து தப்பித்து குகையில் காட்டுவாசியைப் போல் வாழ்ந்த கைதியை 17 வருடங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள வனப்பகுதியான சாங்கை மலைப் பகுதியில் போலீசார் சந்தேகத்தின் பேரில், ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பலவகையான அழகான இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்த கேமரா, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சில இடங்களையும் படம் பிடித்தது.
அதன்படி, மலைகளுக்கு நடுவே உள்ள குகையில் மனிதர்கள் வசிப்பதற்கான சில பொருட்கள் இருப்பதையும், வீடு போன்று கூடாரங்கள் இருப்பதற்கான சில தடயங்களையும் கேமரா படம் பிடித்தது.
இதனையடுத்து, புகைப்படங்களின் அடிப்படையில் அந்த இடத்தை தேடிச் சென்ற போலீசார், அங்கே ஆய்வு செய்தனர். அப்போது, அந்த குகையில் கடந்த 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சாங் சியாங் வசிப்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வயைில் பதில் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது புகைப்படங்கள் மற்றும் அவரது கை ரேகையைக் கொண்டு ஆய்வு செய்ததில், கடந்த 2002 ஆம் ஆண்டு, குழந்தைகளைக் கடத்தியதாகச் சீனாவில் கைது செய்யப்பட்ட சாங் சியாங் தான் அவர் என்பது தெரியவந்தது.
சீனாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு, குழந்தைகளைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்ட சாங் சியாங், திட்டமிட்டு சிறையிலிருந்து தப்பித்துள்ளார். பின்னர், மலையில் உள்ள குகையை வீடுபோல் பயன்படுத்தி அங்கேயே தங்கி உள்ளார். மேலும், காட்டில் கிடைக்கும் இயற்கையான காய், பழங்களை உணவாக உட்கொண்டும், ஆற்று நீரைக் குடிநீராகவும் பயன்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக மனிதர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல், கடந்த 17 வருடைகளாகக் குகையில் காட்டுவாசியைப் போல் வாழ்ந்து வந்துள்ளார். தற்போது சாங் சியாங், கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.