போலீசார் தாக்கியதில் பெண் தீக்குளிப்பு!
By Arul Valan Arasu | Galatta | September 30, 2019 18:56 PM IST
போலீசார் தாக்கியதில் மனமுடைந்த பெண் தீக்குளித்த நிலையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜோதி வீட்டிற்கு, இரவு நேரத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த முகத்துப்பாண்டி, ஜோதியின் அண்ணனைக் கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜோதியின் தந்தையை, முகத்துப்பாண்டி தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனால், முகத்துப்பாண்டி மீது புகார் அளிக்க இரவு நேரத்தில் நொளம்பூர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, பணியிலிருந்த காவலர்கள் புகாரை வாங்க மறுத்ததோடு, ஜோதியைக் காலையில் வரும்படி கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஜோதிக்கும், காவலர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பணியிலிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் லூர்து மேரி, ஜோதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்துபோன அவர், வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்துள்ளார். அப்போது, தீ கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், ஜோதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு 42 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோதி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். அப்போது, புகாரளிக்கச் சென்ற தன்னை, பணியிலிருந்த பெண் காவலர் லூர்து மேரி, தாக்கியதால் அவமானத்தால், தீக்குளித்ததாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, லூர்து மேரி மீது நொளம்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஜோதியின் தந்தையைத் தாக்கிய முகத்துப்பாண்டியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசார் தாக்கியதில் மனமுடைந்த பெண் தீக்குளித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.