அடேங்கப்பா.. அனகோண்டா பாம்பு 100 கிலோவா?
By Arul Valan Arasu | Galatta | September 16, 2019 17:00 PM IST
பிரேசில் நாட்டில் நீருக்கடியில் 100 கிலோ எடைகொண்ட அனகோண்டாவைப் படம் பிடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற பார்டலோமியோ என்ற உயிரின ஆய்வாளர், ஃபார்மோசோ ஆற்றில் நீருக்கடியில் உள்ள உயிரினங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மிகப் பெரிய அனகோண்டா பாம்பு ஒன்று வந்துள்ளது.
மிகப் பெரிய பாம்பைக் கண்டதும், அவர் முதலில் பயந்துள்ளார். ஆனால், பாம்பு இவரைக் கண்டதும் எதுவும் செய்யாமல், அதன் இறையைத் தேடுவதிலேயே கவனமாக இருந்துள்ளது. இதனையடுத்து, ஆராய்ச்சியாளர் பார்டலோமியோ, அந்த அனகோண்டா பாம்பிற்கு மிகப் நெருக்கமாகச் சென்று, வளைத்து வளைத்து படம் பிடித்தார்.
அந்த வீடியோவில், அவர் அனகோண்டாவின் பக்கத்தில் செல்வதும், அந்த பாம்பு அவரையும் கேமராவையும் உற்றுப் பார்ப்பதும், பின்பு விலகி விலகிச் செல்வதுமாகக் காட்சிகள் இருக்கிறது.
இதனிடையே, அந்த பாம்பின் நீளம் சுமார் 23 அடி நீள இருக்கும் என்றும், குறிப்பாக அந்த அனகோண்டா பாம்பு கிட்டத்தட்ட 100 கிலோ எடை கொண்டதாக இருக்கும் என்றும் உயிரின ஆய்வாளர் பார்டலோமியோ தெரிவித்துள்ளார்.
அடர்ந்த வனப்பகுதியில் அனகோண்டா பாம்பைப் பலரும் பார்த்திருக்கும் நிலையில், முதன் முதலாக நீருக்கடியில் ஒருவர் அருகில் சென்று படம் எடுத்துள்ள வீடியோ காட்சிகள், தற்போது வைரலாகி வருகிறது.