வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் திரிபு... உலக சுகாதார மையத்தின் ஆறுதல் தகவல்!
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை உயிரிழப்பு இல்லை என உலக சுகாதார நிறுவனம் சற்று ஆறுதலை தரும் வகையில் கூறியுள்ளது.
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய விதிமுறையின்படி ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனைகள் கட்டாயம் எடுக்கப்படுகிறது. அதன் முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பிற நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேர் தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பாதிப்பால் இதுவரை இறப்பு எண்ணிக்கை இல்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 375 பேர் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவில் கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
ஒமிக்ரான் வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும், அதே நேரம் பயப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும், இந்த உருமாறிய வைரஸ் குறித்து தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் பலி இதுவரை இல்லை என்பது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒமிக்ரான் தொற்று நிச்சயம் பரவும் என நம்புவதாக கூறும் உலக சுகாதார மையம், அதற்கு ஏற்ப உலக நாடுகள் தங்களையும் தங்களின் சுகாதார அமைப்பையும் தயார்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார மையம் பொதுவாக பயண தடை விதிப்பதை ஏற்க மறுத்துள்ளது. தொற்றை எதிர்கொள்ளும் சுகாதார கட்டமைப்பு இல்லாத நாடுகள் வேண்டுமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் கூறுகையில் “இப்போதைய தொற்று வேகத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளது ஒமிக்ரான். இதனால் விரைவில் உலக அளவில் தொற்று எண்ணிக்கை இருமடங்காக உயரலாம். எனினும் கொரோனா சிகிச்சையில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். பயப்படத் தேவையில்லை.
இப்போது இருக்கும் தடுப்பூசிகளே இதிலிருந்தும் காக்கும். தேவை என்றால் மூன்றாவது பூஸ்டர் டோஸ் போடலாம். ஒமிக்ரானுக்கும் ஏற்றது போல தடுப்பூசியை மேம்படுத்தலாம்.
கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் ஒமிக்ரான் பரவலைத் தள்ளிப் போடலாம். ஆனால் தடுக்க முடியாது. ஒமிக்ரான் பற்றி முழுமையாக அறிந்துகொள்வதே இதை எதிர்கொள்ளும் வழி என்று சௌம்யா கூறியுள்ளார்.