கணவரை விற்க இணையத்தில் ஏலம் விட்ட பெண்...ரிட்டன்- எக்ஸ்சேஞ்ச் இல்லை!
அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த செயல், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அயர்லாந்தை சேர்ந்தவர்ஜான், இவரது மனைவி லிண்டா மெக் அலிஸ்டர். இந்த தம்பதிகளுக்கு கோல்ட் எனும் 4 வயது மகனும், ரைடர் எனும் 6 வயது மகனும் உள்ளனர். ஜான் மற்றும் லிண்டா தம்பதியினர், கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் திடீர் என லிண்டா மெக்அலிஸ்டர் தனது கணவரை, ஆன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான தகவலை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, அவருடைய கணவரை வாங்க 12 பெண்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர். கணவர், மீன் பிடிக்க தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற நேரத்தில் இந்த பெண்மணி இத்தகைய விளம்பரத்தை இன்டர்நெட்டில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜான் எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர், இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக உணவு வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால் இன்னும் சில பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. என்று, அந்த ஏல போஸ்டில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்று தெரிவித்தார்.
வெறும் விளையாட்டாக அவர், இந்த ஏல போஸ்டினை போட்டிருந்த நிலையிலும், இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து அவருடைய நண்பர்கள் ஜானுக்கு தெரிவிக்கும் வரை அவருக்கு தெரியவில்லையாம். பிறகு இருவரும் சேர்ந்து வேடிக்கையாக சிரித்து கடந்து சென்றதாக லிண்டா கூறி இருக்கிறார். இந்த ஏலம் இந்திய ரூபாயில் 5 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை குறுகிய நேரத்தில் நீக்கியது.
இதன் தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜேம்ஸ் ராயன், சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று தெரிவித்தார். இந்த செய்தியை படித்த சிலர், கணவர் மனைவிக்கும் பிரச்சனை வருவது சகஜம் தான் அதற்குன்னு இப்படியாப்பா பண்ணுவீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.