“அடுத்து வரும் கொரோனா தொற்று தீவிர தன்மை கொண்டதாக இருக்கும்!” WHO
“அடுத்து வரும் கொரோனா உருமாற்றத்தின் திரிபு, அதிக தீவிரத் தொற்றுத் தன்மை கொண்டதாக இருக்கும்” என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று.
உலகம் முழுவதும் 3 வது அலையாக தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று வைரசானது, அடுத்தடுத்து மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று, பல வகைகளிலும் தொடர்ச்சியாக பரவி, மனிதர்களை கடுமையாக பாதித்து வருகிறது.
இதனால், உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கடும் பீதி அடைந்ததுடன், மிக கடுமையாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஏற்படும் இறப்பு விகிதமும் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கிறது.
இப்படியாக டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் இந்த சூழலில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று சமீபத்தில் அதி வேகமாகப் பரவி வந்ததுடன், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா 3 வது அலையும் வீசி, தற்போது தான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறதே என்றே கூறலாம்.
இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், தற்போது தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு, அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான், “அடுத்து வரும் கொரோனா தொற்று தீவிர தன்மை கொண்டதாக இருக்கும்” என்று, தற்போது WHO எனப்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில் நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், “இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன், “கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது என்றும், இன்னும் சில திரிபுகள் மக்களைத் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளது” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும், “கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானை விட இன்னும் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும், ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு, இந்த புதிய உருமாறிய வகை ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தெளிவான விளக்கம் ஏதுமில்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றும், அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும்” என்றும், அவர் தெரிவித்தார்.
என்றாலும், “கொரோனா நோய்த் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, “உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் தற்போது மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது” என்றம், அவர் தெரிவித்தார்.
இதனிடையே, “அடுத்து வரும் கொரோனா உருமாற்றத்தின் திரிபு, அதிக தீவிரத் தொற்றுத் தன்மை கொண்டதாக இருக்கும்” என்று, உலக சுகாதார அமைப்பு தற்போது புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளதால், உலக மக்கள் மீண்டும் பீதியடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.