சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீப காலங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் இறப்பது குறித்தும் அவர்கள் இறப்பில் அவ்வப்போது சந்தேகம் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லும் நபர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணடைகினற்னர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சென்னை விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பேசிய போது, " சென்னை மாநகர காவல்துறை மேற்கொள்ளும் வழக்கமான வாகன பரிசோதனையின்போது பட்டினபாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி உள்ளனர்.
அதனைதொடர்ந்து கஞ்சா போதையில் இருந்த அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முறையான பதில் அவர்கள் அளிக்கவில்லை என்றும், வாகனத்தையும் அவர்களையும் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்த போது விக்னேஷ் செல்ல மறுத்துள்ளார். இதையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்க முயற்சித்துள்ளார். இதை சமாளித்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சுரேஷ் மீது கொலை உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சுரேஷ் மீது 2 வழக்குகள் இருப்பது அப்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி இருவருக்கும் உணவு அளித்துள்ளனர். காலை உணவிற்கு பிறகு விக்னேஷுக்கு வாந்தி , வலிப்பு வந்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது . உதவி ஆய்வாளர் ,காவலர், ஊர்காவல் படையை சேர்ந்த 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு கடைக்கோடி மனிதனுக்கும் மனித உரிமை காக்கப்பட்டு உரிய நீதி கிடைக்க அரசு துணை நிற்கும். மேலும் பேசியவர் காவல்நிலையத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார் .
இந்நிலையில் விக்னேஷ் காவல்நிலையத்திலிருந்து தப்பி ஓட முயல்வது போலவும், அவரை போலீஸார் விரட்டிப் பிடிப்பது போலவும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உயிரிழந்த விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷின் உடலில் தலை, கண்புருவம், இடது கை, தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தக்கட்டு காணப்படுவதாகவும், லத்தியால் தாக்கிய அடையாளங்கள் உடலில் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க் காவல் படைக்காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், கிடைத்துள்ள விக்னேஷ் அவர்களின் உடற்கூராய்வு முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில், இன்று இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணையினைத் தொடர்ந்து நடத்திட CB-CID போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன் ராஜ், ஊர் காவல் படை காவலர் தீபக் ஆகிய 3 பேர் உட்பட தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணபதி, எழுத்தர் முனாஃப், ஆயுதப்படை காவலர் கார்த்திக், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பெண் காவலர் ஆனந்தி ஆகிய 9 போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 4 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அந்த அறிக்கையின் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு பரிந்துரை அளித்தார்.
அதனைத்தொடர்ந்து சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர் சரவணன், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். விசாரணை கைதி கொலை வழக்கில் இதுவரை போலீசார் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.