உக்ரைன் போர் பதற்றம்.. இந்தியர்களை அழைத்து வர உக்ரைன் பறந்தது ஏர் இந்தியா விமானம்!
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு விமானம் உக்ரைனுக்கு புறப்பட்டது.
உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. உக்ரைன், அமெரிக்கா, 5 ஐரோப்பிய நாடுகள் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடந்தது.
அதனைத்தொடர்ந்து உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர சிறப்பு ஏர் இந்தியா விமானம் உக்ரைனுக்கு புறப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ட்ரீம்லைனர் பி-787 விமானம் சிறப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 18 அன்று இந்தியா மற்றும் உக்ரைன் இடையே இந்த மாதம் மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. உக்ரைனின் மிகப்பெரிய விமான நிலையமான போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு பிப்ரவரி 22, 24 மற்றும் 26 தேதிகளில் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவித்தது. மேலும் இன்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.