“உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கட்டளை மையங்களை தாக்கப்போகிறோம்!” ரஷ்யா பகிரங்க மிரட்டல்
கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பல் மீது உக்ரைன் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், “உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கட்டளை மையங்களை தாக்கப்போகிறோம்” என்று, ரஷ்யா பகிரங்கமாக மிரட்டல் விடுத்து உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் 51 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன், உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாகவே, “ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிக்கையாக வெளியிட்டது.
அதன் படி, “உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி வருவதாகவும், உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டு உள்ளனர்” என்றும், குற்றம்சாட்டி உள்ளது.
குறிப்பாக, “உக்ரைன் மரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும்” குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரசாயன, உயிரி மற்றும் அணு ஆயுதத் தாக்குதல்களிலிருந்து வீரா்களைப் பாதுகாப்பதற்கான கவச ஆடைகளையும் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ ஹெலிகாப்டா்களையும், ராக்கெட் குண்டு சாதனங்களையும் வழங்க அமெரிக்கா முன் வந்து உள்ளது.
இப்படியான சூழலில் தான், முன்னதாக கருங்கடலில் நிற்க வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் மாஸ்க்வா மீது, உக்ரைனின் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதில், ரஷ்யாவின் கருங்கடல் போர்க்கப்பலபானது, மிக கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, அதன் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
ரஷ்ய போர்க் கப்பல் மீது உக்ரைன் பயங்கர தாக்குதல் நடத்தியது, ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தான், “உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது, மிக கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாக” ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
அதன் படி, “உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்திற்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலை மீது, கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், ரஷ்ய படைகள் கூறி உள்ளன.
இதனிடையே, “உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் இரவு முழுவதும் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றதாகவும்” தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.