இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,06,122 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த நிலையில் படிப்படியாக குறைந்தது என்பதும்,  தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருவதால் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கடந்த 2 வாரமாக உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்பட ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

britain corona highஇதனால் இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் புதிதாக 1,06,122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,47,473 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 99 லட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,77,420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை வழக்கம் போல கொண்டாடலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். 

இருந்தபோதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு முடிந்த பின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 122 ஆக பதிவாகியுள்ளதால், பலர் விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனால் பல தொழிற்சாலைகள், அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக மேலும் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இங்கிலாந்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை அங்கு 3 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

britain corona casesஇந்நிலையில் 5 முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி  செலுத்தப்பட இருக்கிறது. 

5 வயது முதல் 11 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறுவர்களுக்கு நேர்மறையான பயன் அளிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு  தெரிவித்துள்ளது.

இதனிடையே ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தனது வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார்.

தற்போது எல்லா நாடுகளிலும் ஒமிக்ரான் பாதிப்புகள் உயர்ந்து வருவதால் தினசரி பதிவாகும் பாதிப்புகளின் எண்ணிக்கை உலகம் முழுக்கவே அதிகரித்து வருகிறது.

இதுவரை 277,470,942 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7,168 பேர் பலியாகி உள்ளனர். 5,392,690 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.