அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி - மேகன் எழுப்பிய குற்றச்சாட்டு.. இங்கிலாந்து ராணி எலிசபெத் விளக்கம்!
By Aruvi | Galatta | Mar 10, 2021, 11:41 am
அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி - மேகன் எழுப்பிய குற்றச்சாட்டுத் தொடர்பாக இங்கிலாந்து ராணி எலிசபெத் விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, முன்னாள் அமெரிக்க நடிகையான மேகன் மார்கெலும் காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அதே நேரத்தில், திருமணத்திற்குப் பிறகு இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிகப் பற்றில்லாமல் இருந்து வந்த ஹாரி - மேகன் தம்பதி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் உள்ள நிலையில், மேகன் 2 வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
எனினும், ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகியதற்குக் காரணம் குறித்து இங்கிலாந்து பத்திரிகைகள் ஒவ்வொரு விதமான காரணத்தைக் கூறி பல்வேறு கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தன. ஆனால், இது எதற்கும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்த வந்த ஹாரியும், மேகனும் தற்போது தங்களது மவுனத்தைக் கலைத்தனர்.
அதன் படி, இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகிய இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகன் மார்கெல் ஆகிய இருவரும் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே நடத்திய நேர்காணலில் கலந்துகொண்டனர்.
இந்த பேட்டியின் போது, ஹாரி - மேகன் ஆகிய இருவரும் “அரச குடும்பத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள், தங்களுக்குப் பிறக்கவிருக்கும் அடுத்த குழந்தையின் பாலினம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினார்கள்.
மிக முக்கியமாக, “அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எல்லாம் வந்தது என்றும், கலப்பின பெண்ணான எனக்கு குழந்தை பிறந்ததால், தங்கள் மகன் ஆர்ச்சிக்கு இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது” உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மேகன் அப்போது முன் வைத்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்த பேட்டி தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “கடந்த சில ஆண்டுகளாக ஹாரி - மேகன் எவ்வளவு சவாலாக இருந்து வந்து உள்ளனர் என்பதை முழு குடும்பமும் அறிந்து வருத்தப்படுகிறார்கள்” என்று, குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “அவர்கள் எழுப்பப்பட்ட பிரச்சினைகள், குறிப்பாக இனம் தொடர்பானவை போன்றவை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படும்” என்றும், இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்த அறிக்கையின் மூலம் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.