தாய்லாந்திலும் பரவிய ஒமிக்ரான் திரிபு... இதுவரை எத்தனை நாடுகளுக்கு பரவியுள்ளது?...
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு தற்போது தாய்லாந்து நாட்டிலும் பரவியுள்ளது.
டெல்டா கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இப்போதுதான் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன. இதையொட்டி ஆங்காங்கே சில நாடுகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில் திடீரென ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் ஆபத்தானது என்றும், இது வேகமாக பரவக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வேகமாக பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல், லேசான காய்ச்சல் ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஒமிக்ரானில் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் காணப்படுவதால், உலக சுகாதார அமைப்பு, ஒமிக்ரானை கவலையளிக்க கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது. அதாவது பெரும் முயற்சி எடுத்து, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் எச்சரிக்கை ஆகி வருகின்றன.
இந்நிலையில் 47-வது நாடாக ஒமிக்ரான் வைரஸ் தற்போது தாய்லாந்திலும் பரவியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி தாய்லாந்து வந்த 35 வயது நிரம்பிய அமெரிக்கருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தாய்லாந்தில் முதல் முறையாக ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடரில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து ஒமிக்ரான் பரவிய நபர் தனிமைப்படுத்தப்பட்டு அவரை தாய்லாந்து சுகாதாரத்துறை தீவிர கண்காணித்து வருகிறது.
இதற்கிடையில் சிங்கப்பூர் அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "மற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது. அதேபோல ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தி உருவாகும்.
அதையும் தாண்டி ஒமிக்ரானால் அவர்கள் பாதிக்கப்படலாம். அந்த அளவிற்கு இது ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும், உலகம் முழுவதும் பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி தெரியவந்தவை என்றாலும், முழுமையான ஆய்வு தான் ஒமிக்ரானின் தன்மை, தீவிரத்தை கண்டறிய உதவும்.
இன்னும்கூட இந்த ஒமிக்ரான் பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு இப்போதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அதேபோல இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் எந்த அளவுக்கு தடுக்கும் என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது. எனினும் மக்கள் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.