தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதன் முறை என்பது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் இந்த தருணத்தில், நீட் விலக்கு மசோதா சட்டமன்றத்தல் மீண்டும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என். ரவி, மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார்.
இந்த நீட் மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்ற நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அதன் படி, தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வதற்கு சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படுவது இதுவே முதன் முறை என்கிற வரலாற்று சிறப்பு மிக்க நாளானது இன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறியது.
அதன்படி நடைபெற்ற தமிழக சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.
கிட்டதட்ட 142 நாட்களுக்குப்பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, பிப்ரவரி 1 ஆம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். அதற்கு, “இந்த கடிதத்தை பொது வெளியில் வெளியிட்டது உகந்தது அல்ல” என, சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடைசியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா மீதான விவகாரத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டாட்சித் தத்துவத்தை நிலை நாட்ட, கல்வி உரிமையை மீட்டெடுக்க இன்று நாம் கூடியுள்ளோம்” என்று, குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “எனது பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது” என்றும், கூறினார்.
“அரசுப் பள்ளி மாணவர்களுகு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த சட்டமன்றம் தான் உறுதி செய்தது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி சட்டப் பாதுகாப்பை பெற்றது இந்த சட்டமன்றம் தான்” என்றும், நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றதும், இந்த சட்டமன்றம் தான்” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்ட மன்றத்தால்தான் முடியும் என்றும், அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல நீட் தேர்வு” என்றும், அவர் கூறினார்.
அத்துடன், “நீட் தேர்வு விலக்கிற்காக மட்டுமல்ல என்றும், இந்த சட்ட மன்றத்தின் இறையாண்மையை காக்க, சமூக நீதியை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும், தெரிவித்தார்.
“நீட் தேர்வு என்பது ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக்கனவுக்கு தடுப்புச்சுவர் போடுகிறது என்றும், நீட் தேர்வு என்பது தனியார் பயிற்சிமையங்களுக்கு சாதகமானது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“கடந்த 2019 ஆம் ஆண்டு 4 பேர், 2020 ஆம் ஆண்டில் 5 பேர், 2021 ஆம் ஆண்டு 15 பேர் நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக மத்திய அரசே கூறியுள்ளது என்றும், நீட் தேர்வில் வெற்றி பெற ஆள் மாறாட்ட நிகழ்வுகள் கூட நடந்துள்ளன” என்றும், முதல்வர் குற்றம்சாட்டினார்.
“நீட் தேர்வு என்பது மாணவர்களை கொல்லக்கூடியது என்றும், அது நீட் தேர்வு அல்ல, பலிபீடம்” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, “ஏழை, எளிய மாணவர்களை ஓரங்கட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட தேர்வே நீட் தேர்வு” என்றும், அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
“மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலிபீடம் போன்றது என்றும், சில மாணவர்களை கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” என்றும், முதல்வர் முழங்கினார்.
“நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் சரியானவை அல்ல என்றும், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துக்கள் கேட்ட பிறகே ஏ.கே.ராஜன் குழு அறிக்கை அளித்தது” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.
முக்கியமாக, “நீட் தேர்வுக்கு முன் 90 சதவீதம் இடங்களை மாநில பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுவந்தனர் என்றும், ஆனால் தற்போது தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை நாம் அகற்றவேண்டாமா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பாக, “நீட் தேர்வு என்பது பணக்கார நீதியை பேசுகிறது என்றும், அரசியலமைப்பு என்பதே சட்டத்தின் நீதியை பேசுகிறது என்றும், அரசியலமைப்புச் சட்டம் கூறக் கூடிய சமத்துவத்திற்கு எதிரானது நீட் தேர்வு” என்றும், மிக கடுமையாகவே முதல்வர் விசமர்சனம் செய்தார்.
“இந்த நீட் மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பியதன் மூலம், சட்டமன்றத்தின் இறையாண்மை கேள்விக்குறியாகி உள்ளது” என்றும், முதவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.
“சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும் என்றால், இந்திய மாநிலங்களின் கதி என்ன?” என்றும், பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் கேள்வியையும், அவர் எழுப்பினார்.
மிக முக்கியமாக, “நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் மசோதாவை மதிக்காமல் திருப்பி அனுப்பி இருப்பது, மக்களாட்சிக்கு எதிரானது என்றும், ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டே நடந்து கொள்ள வேண்டும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீட் விலக்கு மசோதா மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இன்றைய தினமே, இந்த மசோதா தமிழக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.