“உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை” வெளியுறவுத் துறை விளக்கம்..
உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை” என்று, இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்து உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதாவது, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதி காலை 4.50 மணி அளவில் அதிகாரப்பூர்வமான போரை தொடங்கியது.
எனினும், இன்று வரை இடைவிடாமல் போர் தொடர்ந்து 8 வது நாளாக நடைபெற்று வருவதால், உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக முன்னேறி வருகின்றன.
இந்த நிலையில் தான், “உக்ரைன் - ரஷியா போர் தீவிரம் அடைந்து உள்ளதால், பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி” இந்திய தூதரகம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தான், இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
அதன்படி, “கார்கிவ் நகரில் இந்திய மாணவர்களை உக்ரைன் படைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும்” ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று மாலை குற்றம் சாட்டியது.
மேலும், “ எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, உக்ரைனை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து உள்ளனர்” என்று, ரஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் மீடியாவிற்கு செய்தி தெரிவித்தார்.
அத்துடன், “இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்ய ராணுவம் தயாராக உள்ளதாகவும், ரஷ்யாவில் இருந்து தனது சொந்த ராணுவ விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தான், “உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை” என்று, மத்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்து உள்ளது.
அதன்படி, ரஷிய தரப்பின் குற்றச்சாட்டுக்கு அதிரடியாக மறுப்பு தெரிவித்து உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், “உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்படவில்லை என்றும், உக்ரைன் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நேற்று கார்கில் நகரில் இருந்து பெரும்பாலான இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர்” என்றும், தெரிவித்து உள்ளார்.
“உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும், இந்திய மாணவர்களை உக்ரைனின் மேற்கு பகுதிக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்க கோரி உள்ளோம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“கடந்த சில நாட்களாக ஏராளமான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார் என்றும், ஏராளமான இந்தியர்கள் விரைவாக மீட்கப்பட்டதை சாத்தியமாக்கிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், அவர் தெரிவித்தார்.
“இந்தியர்களை தங்கள் எல்லைக்குள் அழைத்து தங்க இடம் அளித்ததற்காக உக்ரைனில் அண்டை நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும், அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
குறிப்பாக, “உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருப்பது போல் எந்த தகவலும் வரவில்லை என்றும், இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் உக்ரைன் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்” என்றும், இந்தியா விளக்கம் அளித்து உள்ளது.