“ரஷிய வீரர்கள் ஆயிரம் பேர் உயிரிழப்பு” “8 உக்ரைன் கடற்படை கப்பல்கள் அழிப்பு” ரஷ்யா - உக்ரைன் மாறி மாறி அறிவிப்பு..
“உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய படையை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர்” என்று, உக்ரைன் ராணுவம் அறிவித்து உள்ள நிலையில், “8 உக்ரைன் கடற்படை கப்பல்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக” ரஷ்யாவுக்கும் பதிலுக்கு அறிவித்து உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது.
என்றாலும், அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும், உக்ரைன் தான் தற்போது முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அதாவது, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கிலான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக குவித்து வந்தது.
இதனால், ரஷ்யா - உக்ரைன் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான போரை தவிர்க்க, ரஷியாவிடம் ஐ.நா அமைப்பு கோரிக்கை விடுத்தது.
ஆனாலும், தொடர்ச்சியாக உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தொடர்ச்சியாக தாக்கி வருகின்றன.
அதன்படி, நேற்று முன் தினம் ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில், உக்ரைன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினர் குற்றம்சாட்டினார்.
அத்துடன், “ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்து உள்ளனர்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று 2 வது நாளாகவும் போர் நீடித்து வந்த நிலையில், “ரஷியா தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்” என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது “உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்து உள்ளோம்” என்று, ரஷியா கூறியுள்ளது.
தற்போது, இதற்கு பதில் அளிக்கும் விதமாக,“உக்ரைன் ராணுவ தாக்குதலில், ரஷிய படையை சேர்ந்த ஆயிரம் போர் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்” என்று, பதிலுக்கு உக்ரைன் ராணுவம் தற்போது அறிவித்து உள்ளது.
குறிப்பாக, “ரஷியா படையெடுப்பினால், 10 ராணுவ அதிகாரிகள் உள்பட 137 வீரர்களை இழந்து உள்ளோம்” என்று, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
எனினும், “ரஷிய வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர், எந்த அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்பது பற்றி ரஷியா ராணுவம் தற்போது வரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
முக்கியமாக, “உக்ரைனின் கார்கிவ் நகருக்கு வெளியே ரஷிய ராணுவ படையை சேர்ந்த, பல ராக்கெட்டுகளை ஒரே சமயத்தில் ஏவும் திறன் வாய்ந்த வாகனம் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் பக்கத்தில் ஆடை முழுவதும் பனி படர்ந்தபடி வீரர் ஒருவரின் உடல் கீழே விழுந்து கிடப்பதுபோன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி” உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, சற்று முன்னதாக “8 உக்ரைன் கடற்படை கப்பல்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், உக்ரைன் நாட்டின் மெலிட்போல் நகரை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும்” ரஷ்ய ராணுவம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.