சீனாவிடம் ராணுவ உதவி கேட்கும் ரஷ்யா! “இனி உக்ரைன் நிலைமை என்னவாகும்?”
உக்ரைனுக்கு எதிரான போருக்கு, முதன் முறையாக சீனாவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகளை ரஷ்யா கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 19 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இப்படியாக, தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை மிக கடுமையாக தாக்கி வருவதால், ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்களின் பல இடங்களிலும் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.
இதனால், “உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்?” என்று, உலக நாடுகள் யாவும் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கிறது.
எனினும், எதை பற்றியும் கவலைப்படாத ரஷ்யா படைகள், உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
இதன் காரணமாகவே, உக்ரைனில் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை எல்லா இடங்களிலும் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
இதனால், “உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான ஒரு இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை” என்ற கருத்தும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.
இவற்றுடன், “வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருவதாகவும்” அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியாக, தொடர்ச்சியாக இன்றுடன் 19 வது நாளாக ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிந்து வருவதால், முதன் முறையாக சீனாவிடம் இருந்து “டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் மற்றும் உதவிகள் தேவை” என்று, ரஷ்யா கேட்டிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கும் சீன தூதரக செய்தித் தொடர்பாளர் கூறும் போது, “ரஷ்யாவுக்கு சீனா உதவுவது குறித்த எந்த தகவலையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
இந்த சூழலில் தான், “அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரோம் சென்று சீனாவின் உயர் மட்ட தூதரக அதிகாரி யாங் ஜீச்சியை சந்திப்பார்” என்று, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அத்துடன், உலக நாடுகள் யாவும், “ரஷ்ய தாக்குதலை மனித உரிமைகள் மீறல்” என்றே, கண்டித்து அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தான், “உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளின் மிக கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டு உள்ளதால், சீனா ரஷ்யாவுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவது கடினம்” என்கிற ஒரு தகவலும் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இவற்றுடன், உக்ரைன் விவகாரத்தில் இது வரை ரஷ்யாவை கண்டிக்காத சீனா, “உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளது.
மிக முக்கியமாக, “ரஷ்யா கேட்டுள்ள உதவிக்கு, சீனா தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை” என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.