காதலுக்காக அரச பட்டத்தை துறந்து காதலரை கரம் பிடிக்கும் ஜப்பான் இளவரசி!
காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி, வரும் 26 ஆம் தேதின தனது காதலரை முறைப்படி திருமணம் செய்துகொள்கிறார்.
ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இன்னும் பழைய முறையிலான அரச குடும்பங்கள் இன்று வரை பாரம்பரியமாக இருந்துகொண்டு தான் வருகின்றன.
அந்த வகையில், ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான 29 வயதான மகோ, கடந்த 2012 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது, தன்னுடன் படித்து வந்த 29 வயதான தனது சக நண்பன் கீ கோமுரோ என்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞருடன் தொடக்கத்தில் நட்பாகப் பழகி வந்தார்.
இந்த நட்பு காலப்போக்கில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்து உள்ளது. இதனால், அரச குடும்பத்தின் இளவரசியும், அந்த சாதாரண குடும்பத்தின் இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் தங்களது திருமண பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனால், ஜப்பான் நாட்டு மக்கள் உட்பட பல உலக நாடுகளே இதனை ஆச்சரியமாகப் பார்த்தது.
பல நூற்றாண்டுகளாகத் தொடரும் அரச வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால், அவர் தனது அரச பட்டத்தைத் துறக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்த அரச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, இளவரசியான 29 வயதான மகோ, காதலனை கைப்பற்றுவதற்காகத் தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும் இந்திய மதிப்பில் சுமார் 9 கோடியே 63 லட்சம் ரூபாயையும் அவர் நிராகரித்துள்ளார்.
அத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ - கீ கோமுரோ ஜோடி அறிவித்த நிலையில், கீ கோமுரோவின் தாயின் கடன் பிரச்சினையால் இந்த திருமணம் அப்போது ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கீ கோமுரோ, தனது சட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்கா சென்று விட்டார்.
இப்படியாக, கடந்த 3 ஆண்டுகளாகத் தனது காதலியை பிரிந்து இருந்த அவர், கடந்த 27 ஆம் தேதி திங்கட் கிழமை ஜப்பான் திரும்பினார்.
இந்த நிலையில் தான், மகோ - கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் என்று, அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தை உள்ளூரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பதிவு செய்வார்கள் என்றும், திருமணத்துக்குப் பிறகு காதலர்கள் இருவரும், அமெரிக்காவில் குடியேறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.