“பாகிஸ்தான் எங்கள் 2 ஆம் தாயகம்.. இந்தியாவுடன் நல்லுறவு வேண்டும்!” தலீபான்கள் அறிவிப்பு
“பாகிஸ்தான் எங்கள் இரண்டாம் தாயகம் என்றும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக்கொள்ளத்தான் நாங்கள் விரும்புகிறோம்” என்றும், தலீபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். அந்நாட்டில், கடந்த காலங்களில் தாலிபன்களின் ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அது போன்ற பீதியே தற்போது அங்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், “ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களை எதிர்க்க புதிய கொரில்லா படை மற்றும் ராணுவம் தயாராகி வருவதாகவும்” கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கும் தலீபான்கள், தங்களது நிலைபாடு குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “பாகிஸ்தான், எங்களது 2 வது தாயகம் போன்றது” என்று, குறிப்பிட்டார்.
“பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது என்றும், மதம் என்று வருகிற போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்தே இருக்கிறோம்” என்றும், அவர் கூறினார்.
அத்துடன், “எங்கள் இரு நாட்டு மக்களும் கலந்துறவாடுகிறார்கள் என்றும், இதனால் பாகிஸ்தான் உடனான எங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்றும், பேசினார்.
குறிப்பாக, “ஆப்கானிஸ்தானை தலீபான்கள் பிடித்ததில் பாகிஸ்தானுக்கு எந்த ஒரு பங்கும் இல்லை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், “பாகிஸ்தானும், இந்தியாவும் தற்போது நிலுவையில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தையின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் தலீபான்கள் நல்லுறவு வைத்துக்கொள்ளத்தான் விரும்புகிறோம்” என்றும், தங்களது நிலைப்பாடு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
“நாங்கள் அமைக்க விரும்பும் புதிய அரசு இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில், அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் பங்கு பெறுவதாக இருக்கும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முக்கியமாக, “ஆப்கானிஸ்தான் நாட்டை, வேற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்த விட மாட்டோம் என்றும், தலீபான்கள், ஆப்கானிஸ்தானில் அனைத்து பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டாயிற்று என்றும், அங்கு அமைதி மற்றும் இயல்பு நிலைமைகளை மீட்டெடுத்து வருகிறோம்” என்றும், அவர் கூறினார்.
அதே போல், “ஆப்கானிஸ்தானுடன் நேர்மறையான ஈடுபாட்டைச் சர்வதேச நாடுகள் கொண்டிருக்க வேண்டும்” என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேட்டுக்கொண்டு உள்ளார்.
அத்துடன், “தலீபான்கள் வசமாகி விட்ட ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு அமைக்க வேண்டும்” என்றும், இம்ரான்கான் வலியுறுத்தினார்.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட மொத்தம் 73 பேர் உயிரிழந்து உள்ளனர்.