ஓமனுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

oman

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஓமனுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓமன் சுப்ரீம் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா உலக அளவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் மீண்டும் வெளிநாட்டினர் வருகை புரிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. அதன்படி ஓமனில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து  ஓமன் நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டவரும் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இந்த கட்டுப்பாடு வான், கடல் மற்றும் தரைவழி போக்குவரத்து என அனைத்திற்கும் பொருந்தும். ஓமன் நாட்டின் எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் இது குறித்து பரிசோதனை செய்த பிறகே நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும். அதேபோல ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாவேம் லெசோதோ, ஈஸ்வத்தினி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளின் மீது விதிக்கப்பட்டு இருந்த பயணத்தடை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் புதிய விதிமுறைகளின்படி 18 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர் அனைவரும் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு நாட்டிற்குள் வருகை புரிய வேண்டும் என முன்நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதில் ஓமன் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் கட்டுப்பாட்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.