“11 நாட்கள் நாட்டு மக்கள் சிரிக்க தடை”... வடகொரியா அதிபர் கடும் கட்டுப்பாடு!
வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா. இந்த நாட்டில் நிலவும் கடுமையான சட்ட திட்டங்களும், அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் செயல்பாடுகளும் அவ்வப்போது கடும் விவாதங்களை கிளப்பும்.
ஏனெனில் கிம் ஜாங் உன் அவ்வப்போது புதுமையான உத்தரவுகளை பிறப்பிப்பார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு வடகொரியாவில் பிறப்பிக்கப்பட்டது.
சமீபத்தில் இறுக்கமான ஜீன்ஸ்களை அணிய தனது நாட்டு மக்களுக்கு கிம் ஜாங் உன் தடை விதித்தார். மேலும் ப்ராண்ட்டட் டீ சர்ட்டுகள், வாசகங்கள் அடங்கிய டீ சர்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வடகொரியாவில் தடை விதிக்கப்பட்டது.
அதனுடன் வெளிநாடுகளின் மொழி வழக்கம், வெளிநாட்டு ஆடை மற்றும் சிகை அலங்காரம் ஆபத்தான விஷம் என்று கூறி அதற்கும் தடை விதித்திருந்தார் கிம் ஜாங் உன்.
மேலும் அமெரிக்க, தென்கொரிய நாடுகளின் திரைப்படங்களை வைத்திருந்தால் சிறை தண்டனை உட்படக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கிம் ஜாங் உன் கட்டுப்பாடு விதித்திருந்தார்.
இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென ஒரு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம்-ஜோங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து கிம்-ஜோங்-இல் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முடிவு செய்துள்ளார்.
இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என வடகொரியா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம்போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என வட கொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலத்தில் மறைந்த அதிபரின் துக்க காலத்தில் குடித்துவிட்டுபோதையில் பிடிபட்ட பலர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
கிம் ஜோங் இல் இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும். ஆனால் இது கிம் ஜோங் இல் இறந்து 10 - வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் வடகொரியா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகொரியா நாட்டை கடந்த 1948-ம் ஆண்டு கிம் இல் சங் என்பவர் நிறுவினார். 1994 ஆம் ஆண்டு இறந்த இவர், தன்னுடைய கடைசி காலம் வரை வடகொரிய நாட்டை ஆண்டார். 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார். இவர் வடகொரியாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு இயற்கை எய்தினார். அதைத் தொடர்ந்து இவருடைய கடைசி மகனான கிம் ஜோங் உன் அதிபராகி, தற்போது வரையில் 3-வது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். இவரது தலைமையில் வடகொரியா பல அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது.
அது மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு வடகொரியாவுடன் பனிப்போர் நிகழ்கிறது. இந்நிலையில்தான் வடகொரியாவில் இருந்து தற்போது இந்த அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது.