டிக்கெட் எடுக்க சொன்ன அரசுப் பேருந்து நடத்துனர் மீது வட மாநிலத்தவர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து, திருப்பட்டூர் வரை இயக்கப்படும் நகரப் பேருந்து நேற்று இயக்கப்பட்டு உள்ளது.
அதன் படி, இந்த அரசுப் பேருந்தினை, நேற்று காலை ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மற்றும் நடத்துனர் 50 வயதான ஆறுமுகம் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
அப்போது, இந்த பேருந்தானது, நேற்று மாலை பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், சிறுவாச்சூர் கிராமத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 6 பேர், முன் பக்க படிக்கட்டிலும், மற்ற 3 பேரும் பின் பக்க படிக்கட்டில் ஏறி அந்த பேருந்தில் பயணம் செய்து உள்ளனர்.
அப்போது, அந்த பேருந்தின் நடத்துனர் ஆறுமுகம், அந்த 6 பேரிடமும் டிக்கெட் கேட்டு உள்ளார். அப்போது முன் பக்கம் இருந்தவர்கள், “பின் பக்கம் உள்ளவர்கள் எடுப்பார்கள்” என்று, கூறி உள்ளனர்.
அதன்படி, அவர் பின் பக்கம் இருந்தவர்கள் டிக்கெட் கேட்டு உள்ளார். அதற்கு, அவர்கள் “முன்பக்கம் உள்ளவர்கள் டிக்கெட் எடுப்பார்கள்” என்றும், அவர் ஏடாகூடமாக பேசியதாக தெரிகிறது.
அதே நேரத்தில், அந்த வட மாநிலத்தவர்கள் இறங்கும் இடமான விஜயகோபலபுரம் வந்துவிட்டதால், அவர்கள் 6 பேரும் டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் இருந்து இறங்கி உள்ளனர்.
இதனால், கடும் கோபம் அடைந்த பேருந்தின் நடத்துனர் ஆறுமுகம், அவர்களை மறித்து “உங்கள் டிக்கெட்டை காட்டுங்கள்” என்று, கேட்டு உள்ளார்.
அப்போது, “பேருந்தில் பயணம் செய்த அந்த 6 பேரும், நடத்துனரை தாக்கி பேருந்திலிருந்து கீழே தள்ளி” உள்ளனர்.
இதனால், பேருந்தில் இருந்து சாலையின் ஓரத்தில் கீழே விழுந்த ஆறுமுகம் தலையில், அடிபட்டு பலத்த காயம் அடைந்து உள்ளார்.
அதே நேரத்தில், அந்த பேருந்தின் நடத்துனரை தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து, படுகாயம் அடைந்த நடத்துனர் ஆறுமுகம், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் அந்த பேருந்தின் பயணிகள் உதவியுடன் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த, விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், “பேருந்தில் பயணம் செய்த வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் விஜயகோபலபுரம் பகுதியிலுள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும், இதில் அபிநந்தன் குமார்தாஸ் என்ற நபரை கைது செய்து விசாரணை” மேற்கொண்டு வருவதுடன், இவருடன் பயணித்த மற்ற அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்த வட மாநிலத்தவர்களிடம் டிக்கெட் கேட்ட காரணத்திற்காக அரசுப் பேருந்தின் நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.