ஒமிக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார மையம் கூறியுள்ளது உலக நாடுகளை சற்று ஆறுதல்படுத்தும் வகையில் உள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. தற்போது ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா திரிபு மாறுபாடு, கடத் மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் சமூக பரவலாக ஒமிக்ரான் திரிபு மாறிவிட்டது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “இங்கிலாந்தில் 261 பேருக்கு, ஸ்காட்லாந்தில் 71 பேருக்கு, வேல்சில் 4 பேர் என மொத்தம் 336 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச பயணிகளுடன் இவர்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை.  அதனால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒமிக்ரான் சமூக பரவல் ஏற்பட்டு உள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம்” என கூறியுள்ளார்.

OMICRON DELTA

இதையடுத்து இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதன் பின்னர் எடுக்கும் முடிவுகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை மேற் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார மையம் கடுமையான நோயை ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குநர் மைக்கேல் ரியான் கூறும்போது,  "முந்தைய கொரோனா வகைகளை விட ஓமிக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன, அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. ஒமிக்ரான் குறித்து மேலும் ஆரய்ச்சி தேவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கோவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை தேவையில்லை'' என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: “கோவிட்டால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து ப்ளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு அதை கோவிட்டால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

OMICRON

ஆனால் இந்த சிகிச்சை முறையில் எந்தப் பயனும் இல்லை. இதனால் தீவிர பாதிப்பு கொண்டோர் குணமடைந்ததாகவோ, வென்டிலேட்டரின் தேவை குறைந்ததாகவோ அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை. எனவே கோவிட் நோயாளிகளுக்கு ப்ளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட க்ளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே இவ்வகை சிகிச்சையை அளிக்கலாம்.

கோவிட் சிகிச்சைக்கு ப்ளாஸ்மாவை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது. எனினும் சிகிச்சையில் தீவிரமற்ற, தீவிர, அதிதீவிர கோவிட் தொற்றாளர்கள் 16 ஆயிரத்து, 236 நபர்களிடம் நடத்தப்பட்ட 16 பரிசோதனைகளின் அடிப்படையில் பரிந்துரைந்ததாகவும், தற்போது மேம்படுத்தப்பட்ட ஆய்வில் ப்ளாஸ்மாவால் பலனிருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை” இவ்வாறு உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.