“உடலுறவுக்குச் செல்ல வேண்டும்” என்று, இ பாஸ் எடுக்க காரணம் கூறிய நபரால் போலீசார் கடும் அதிர்ச்சியடைந்து போனார்கள்.
கேரளாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பானது புதிய உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால், நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் மத்திய - மாநில அரசுகள், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் அது பலன் அளிக்காத நிலையில், பல மாநில அரசுகள், ஊரடங்கை உத்தரவை அமல் படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருந்து வருகிறது.
அதன் படி, கேரளா மாநிலத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அங்கு மிக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
முழு ஊரடங்கு காரணமாக, அத்தியாவசியப் பணிக்குச் செல்வோர் மட்டும் இ பாஸ் பெற்றுக்கொண்டு, பயணம் செய்து வருகின்றனர். அத்துடன், “அத்தியாவசியப் பணிக்குச் செல்வோர் மட்டுமே இ பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்” என்றும், அந்த மாநில அரசு கூறியிருக்கிறது.
அதன் படி, கேரளாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் தங்களது சொந்த காரணங்களுக்காக இ பாஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர்.
அப்படி இ பாஸ் கேட்டு, விண்ணப்பிக்கப்பட்டிருந்த ஒரு விண்ணப்பத்தைப் பார்த்து கேரள காவல் துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அதற்குக் காரணம், கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர், இ பாஸ் கேட்டு, விண்ணப்பிக்கப்பட்டிருந்த தன்னுடைய விண்ணப்பத்தில், “Need to go for sex” என்று, குறிப்பிட்டிருந்தார். அதாவது, “உடலுறவுக்குச் செல்ல வேண்டும்” என்று, இ பாஸ் பெறுவதற்கான காரணமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியாவே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், “உடலுறவு செய்திட வேண்டும்” என்று காரணத்தை கூறி இ பாஸ் பெற விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தைப் பார்த்து கடும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த துணை காவல் ஆணையர், சம்மந்தப்பட்ட நபரை உடனடியாக காவல் நிலையம் வருமாறு அழைத்திருக்கிறார். அதன் படி, அந்த நபரும் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார்.
அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "six o clock” என குறிப்பிடுவதற்குப் பதிலாக, "sex" என தவறுதலாக குறிப்பிட்டு விட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார். இதனையடுத்து, காவல் துறை உயர் அதிகாரிகளிடம் அவர் மன்னிப்பும் கோரி கடிதம் எழுதிக் கொடுத்தார். பின்னர், அவர் தவறுதலாகத் தான் அந்த கடிதத்தில் பதிவிட்டார் என்பது தெரிந்து, அந்த நபரை போலீசார் விடுவித்தனர். இச்சம்பவம், கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.