பணம் சம்பாதிக்க வேறு வழியின்றி “தாலி கட்டிய தனது மனைவியை, கணவனே வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்து” மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்த சோனு - கோமல் தம்பதிக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த தம்பதிகள் இருவரும், கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இதனையடுத்து, இருவரும் தங்களது காதலை தங்களது வீட்டில் சொல்லி அதற்கான அனுமதியும் பெற்று உள்ளனர். அதன்படியே, இவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக போதிய வருமானம் இல்லாமல் இருவரும் குடும்பம் நடத்த கடும் அவதி அடைந்து உள்ளனர். இந்த பிரச்சனையோடு, கொரோனா ஊரடங்கு காலமும் வந்ததால், இவர்களது வீட்டில் வறுமை வாட்டி உள்ளது.
அத்துடன், திருமணத்திற்குப் பிறகு இருவரும் வேலை தேடிய நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், கணவன் - மனைவி இருவருமே கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இவற்றுடன், பண தேவை காரணமாக, கணவன் - மனைவி இருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் வந்துகொண்டே இருந்து உள்ளது.
அந்த நேரத்தில், இருவரும் சேர்ந்து பேசி, எந்த தவறு செய்தும், பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று, இருவரும் புதிய திட்டம் போட்டனர். அந்த திட்டத்தின் படி, அந்த பகுதியில் உள்ள சுமன் என்கிற திருமண தரகரைச் சந்தித்து, பேசி உள்ளனர்.
அப்போது, கணவன் சோனு, தனது மனைவி கோமலை, “இவள் என்னுடைய தங்கை என்றும், இவளுக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றும், ஆனால் எங்களால் எந்த வரதட்சணையும் தர முடியாது என்றும், அதற்கு மாறாக, மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை போட வேண்டும்” என்றும், கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து, தரகர் சுமன், அந்த பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு, கோமலைப் பெண் கேட்டு உள்ளார். பெண் வீட்டாரிடம், கோமலுடன் இருந்த அவரது கணவர் சோனுவை, “இவர் தான் பெண்ணின் சகோதரர்” என்று, தரகர் கூறி, மாப்பிள்ளை ரவியிடம் அறிமுகம் செய்து உள்ளார்.
அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி - கோமலுக்கு இடையே முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.
திருமணமும் முடிந்து, அன்றைய இரவு, ரவி - கோமல் இடையே முதல் இரவும் நடந்து உள்ளது. ஆனால், முதலிரவு முடிந்த அடுத்த நாள் மாப்பிள்ளை ரவி தூங்கி எழுந்து பா்த்த போது, அந்த வீட்டில் இருந்து மனைவி கோமல் மாயமாகி இருந்தார். இவற்றுடன், மனைவி கோமலு மாப்பிள்ளை வீட்டு சார்பில் போடப்பட்டு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் என பல பொருட்கள் காணாமல் போனது தெரிய வந்தது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், இது குறித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், “சோனு - கோமல் தம்பதிகள் மட்டுமின்றி, திருமண தரகரும் சேர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமண மோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.