“இந்திய இஸ்லாமிய பெண்களை ஒடுக்குவதை, இந்திய தலைவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
கர்நாடகாவில் “ஹிஜாப் விவகாரம்” மிகப் பெரிய புயலை கிளப்பியிருக்கிறது.
அதாவது, கடந்த காலங்களில் வட மாநிலங்களில் நடைபெற்ற இது போன்ற சம்பவங்கள், இந்த முறை தென்னிந்தியாவான கர்நாடகா மாநிலத்தில் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் சிலர் எப்போதும் போல், பர்தா அணிந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு தரப்பைச் சேர்ந்த குறிப்பிட்ட மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் இஸ்லாமிய மாணவர்கள், கடும் எதிர்த்து தெரிவித்து வந்தனர்.
அதே நேரத்தில், மாணவர்களில் பொதுவாக இருப்பவர்கள் இஸ்லாமியா மாணவிகளும், அவர்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தான், நேற்றைய தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா கல்லூரியில் ஒரு இஸ்லாமிய மாணவி ஒருவர், வழக்கம் போல் பர்தா அணிந்து கொண்டு, கல்லூரிக்கு வந்து உள்ளார். அப்போது, காவித் துண்டு அணிந்திருந்த 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கு வந்து அந்த இஸ்லாமிய மாணவியை திடீரென்று சூழ்ந்துக்கொண்டு “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்பி, அந்த மாணவியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும் பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று, முழங்கி உள்ளார். ஆனாலும், அந்த பெண்ணிடம் “ஜெய் ஶ்ரீராம்” என்று, முழக்கமிட்டபடி, தோழிலில் காவி துண்டு போட்ட மாணவர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாணவியை சூழந்துகொண்டு, பின் தொடர்ந்து ஓடி வந்துள்ளனர்.
அப்போது, அந்த கல்லூரியின் ஆசிரியர் ஒருவர், அந்த மாணவர்களை தடுத்து அந்த இஸ்லாமிய மாணவியை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி, நாடு முழுவதும் பெரும் பதற்றத்திற்கு நேற்றைய தினம் வித்திட்டது.
மேலும், கர்நாடகத்தில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொக்கா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பெரிய அளவில் வன்முறையும் வெடித்தது.
இதனால், அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், “பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து” அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் தான், “கர்நாடகத்தில் பர்தா அணிந்து பள்ளிக்கு செல்வோரை அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று, அமைதிக்கான நோபல் விருது பெற்ற மலாலா கருத்து தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “படிப்புக்கும், பர்தாவுக்கும் இடையே தேர்வு செய்ய நம்மை கல்லூரிகள் கட்டாயப்படுத்துகின்றன” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, “குறைவாகவோ, அதிகமாகவோ இஸ்லாமிய பெண்களின் ஆடையை வைத்து அவர்களை நிர்ணயிக்கிறார்கள் என்றும், இஸ்லாமிய பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும், மலாலா தனது டிவிட்டரில் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.