வலி இல்லாமல் கருணைக்கொலை செய்ய புதிய மெஷின் கண்டுபிடிப்பு!
கருணைக்கொலை இயந்திரத்தின் மூலம் ஒரு பொத்தானை அழுத்தினாலே சில நிமிடங்களில் எந்த வலியும் இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் புதிய மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் புதிய கருணைக்கொலை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த இயந்திரம் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3டி பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்து எங்கு வேண்டுமானாலும் இந்த இயந்திரத்தை ஒன்று சேர்த்து பொருத்திக் கொள்ளலாம். இந்த தற்கொலை அல்லது கருணைக்கொலை இயந்திரத்திற்கு தி சார்கோ கேப்சியூல் என்று பெயர்வைத்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திலும் கருணைக்கொலை செய்து கொள்வது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சுவிட்சர்லாந்து அரசு சட்டப்பூர்வமான கருணைக்கொலைக்குச் சவப்பெட்டி வடிவ காப்ஸ்யூல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்குள் வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை ஒருவர் அடைய முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலம் உயிர் பிரியும். அதாவது இந்த காப்சியூல்-க்குள் இருப்பவர் உடலில் இருக்கும் ஆக்சிஜன் வெறும் 30 நொடிகளில் 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைகிறது. அதன் பின்னர் உள்ளே இருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவார். அதன் பின்பு அடுத்த 5-வது நிமிடத்தில் உள்ளே இருப்பவரின் உயிர் பிரியும் என காப்சியூலை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து உடல் ஆக்சிஜனை குறைப்பதன் மூலம் ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. இந்த காப்சியூலை உள்ள இருந்தும் கூட இயக்கலாம். இதில் உள்ள லாக் இன் சிண்ட்ரோம் தொழில்நுட்பத்தின் மூலம் கண் இமைகளைத் தவிர அனைத்து வகையான தசை செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கூட கண் அசைவு மூலம் இந்த இயந்திரத்தை இயக்க முடியும். டாக்டர் டெத் என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த காப்சியூலை பயனாளர் இருக்கும் இடத்திற்கே எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இந்த காப்சியூல் மக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்ததும் இந்த காப்சியூலை அப்படியே சவப்பெட்டியாகவும் பயன்படுத்தலாம். அடுத்தாண்டு முதல் இந்த காப்சியூல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 2 காப்சியூல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது காப்சியூல் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்க்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாகும். இருப்பினும் சில நாடுகள் தற்கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வலிக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்குப் பதிலாக தற்கொலையோ அல்லது கருணைக்கொலையோ செய்து கொள்ள சில நாடுகள் அனுமதிக்கிறது.