வெள்ளை மாளிகையின் முக்கிய பொறுப்பில் மீண்டும் ஒரு இந்திய பெண்!
By Abinaya | Galatta | Jan 16, 2021, 05:30 pm
கடந்த நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபரானார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றார். இதனால் தமிழகத்தில் கமலா ஹாரிஸின் வெற்றி பரவலாக கொண்டாடப்பட்டது.
இன்னும் சில தினங்களில் ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார். இதனால் பல துறைகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் மற்றொரு இந்திய வம்சாவளி பெண், வெள்ளை மாளிகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஜோ பைடன் நிர்வாகத்தில் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட , சமீரா ஃபசிலி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் முன்னதாக ஒபாமா நிர்வாகத்தில் கருவூல துறையின் மூத்த ஆலோசகராக பணியில் இருந்தார்.
தற்போது அமெரிக்க பொருளாதாரம் குறித்து அதிபருக்கு ஆலோசனைகள் மற்றும் வியூகங்களை வழங்குவது போன்ற முக்கிய செயல்பாடுகளை உள்ளடக்கிய தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இத்தகைய முக்கிய கவுன்சிலில் முக்கிய பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் இடம் பெற்று இருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாக அமைகிறது.
முன்னதாக கடந்த மாதம், வெள்ளை மாளிகையில் டிஜிட்டல் வியூகம் பிரிவின் கூட்டு மேலாளர் பொறுப்பில் காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட அயிஷா ஷா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.