உலகிலேயே இனி சீனாவை விட இந்தியா தான் நம்பர் ஒன்! எதில் தெரியுமா?
இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவையும் முந்தி உலகிலேயே முதல் இடம் பிடிக்கப் போவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
“நாம் இருவர் நமக்கு இருவர்”, “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்றெல்லாம் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அரசு சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல இந்த விளம்பரங்களும் விலக்கிக்கொள்ளப்பட்டன. அதற்கு காரணம், “நாம் இருவர் நமக்கு ஏன் ஒருவர்?” என்ற அளவுக்கு மேடைகளில் பலரும் முழங்க ஆரம்பித்தனர்.
இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கமே!
அதாவது, இந்தியா - சீனா பற்றிய விவாதங்கள் வரும் போதேல்லாம் ”சீனாவிற்கு அடுத்தப்படியாக, இந்தியாவின் மக்கள் தொகை இருப்பதாக” தொடக்க காலத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், காலப்போக்கில் அதுவும் மாறி, “சீனா மக்கள் தொகை அளவிற்கு, இந்தியாவின் மக்கள் தொகை சம அளவிற்கு வந்துள்ளதாகவே” தொடர்ச்சியாக ஆதாரங்கள் இல்லாமல் பேசப்பட்டு வந்தன.
தற்போது, இந்த கூற்றை உறுதியாக்கும் விதமாக, சமீபத்தில் கிடைத்திருக்கும் சில ஆய்வு முடிவுகளும் மிக விரைவாகவே “இந்தியா - சீன மக்கள் தொகையை கடந்து விடும்” என்று, தெரிவித்து உள்ளது.
தற்போது “உலக மக்கள் தொகையில் இந்தியாவின் நிலை என்ன?, இந்திய அளவில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை நிலை என்ன?” என்று சில புள்ளி விபரங்கள் கிடைத்து உள்ளன.
அதன்படி,
- உலக அளவில் சீனாவின் மக்கள் தொகை 147 கோடியை தாண்டி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
- அந்த வகையில், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை, இந்தியா மிக விரைவாகவே மிஞ்சி விடும்” என்கிற வகையிலான, புள்ளி விவரங்கள் தெரிவித்து உள்ளன.
- அதாவது, சீனாவின் மக்கள் தொகையானது வரும் 2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு, மெல்ல மெல்ல குறையத் தொடங்கும் என்றும், அப்போது சீனா உலகின் அதிக மக்கள் உள்ள நாடு என்கிற தனது கிரீடத்தை இந்தியாவுக்கு தாரைவார்த்துவிடும் என்கிற புதிய தகவலும் தற்போது கிடைத்து உள்ளன.
- இதற்கு ஆதாரமாக, சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தற்போது முன்வை விட சற்று குறைந்து வருவது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
- அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை வெறும் 7.2 கோடி மட்டுமே அதிகரித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.
- இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் 1978 ஆம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 41 குழந்தைகள் பிறப்பு என்பதாக இருந்த நிலையில், இது கடந்த 1995 ஆம் ஆண்டு 28 என்றாகி, தற்போது 18.2 ஆக குறைந்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
- இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுட் காலம் 69 என்ற அளவில் இருக்கிறது.
- அதே போல், ஒரு சராசரி சீனர், ஒரு சராசரி இந்தியரை காட்டிலும் 8 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார் என்கிற தகவலும் வெளியாகி இருக்கின்றன.
- அதே நேரத்தில், “இந்தியாவில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் மேலும் அதிகரிக்கும்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பாக, கடந்த 2011 ஆம் ஆண்டில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகொண்ட இந்திய முதியோர்களின் எண்ணிக்கை 8.6 சதவீதமாக இருந்த நிலையில், வரும் 2041 ஆம் ஆண்டிற்குள் இந்த நிலை இன்னும் இரட்டிப்படையும் என்றும், தற்போது கணிக்கப்பட்டு உள்ளது.
- வரும் 2041 ஆம் ஆண்டில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியை விட அதிக குறைந்த நிலையை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.