புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது, புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் தரப்பில் நீதிபதிகளிடம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதனிடையே வழக்கறிஞர் சூர்யபிரகாசம் குறுக்கிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்தியாவில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வேதனை தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது, 'இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை.புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் உரிய ஊதியமும் இல்லை. பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது. புனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது. அசாம் மாநில பெண் திருப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே மிக அதிகமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தரவொன்று வெளியாகியுள்ளது. இது, யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதும் கவனிக்கத்தக்க விஷயம்.
உத்தரப்பிரதேசத்தில் 17 வயதுடைய மேலும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் நேற்று முன் தினம் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஆதிக்க சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பல்ராம்பூர் பகுதியில் 22 வயதான மற்றொரு படியலினப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் பல்வேறு பெண்கள் அமைப்பினர் மற்றும் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் பகுதியில் 17 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அழுத்தம் மற்றும் மிரட்டல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பாக்தாத் பகுதியில் கடந்த 27-ஆம் தேதி 17 வயதுடைய இளம்பெண் தமது அண்டை வீட்டில் உள்ள இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர் மிரட்டல் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக இளம்பெண் விஷம் அருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.