ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா!
ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன. இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன
மேலும் இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அதனைத்தொடர்ந்து 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷியா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் ரஷியாவும், அமெரிக்காவும் கோரிக்கைவிடுத்திருந்தது. தற்போது வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டது. இது இந்தியா-ரஷியா உறவில் நெருக்கத்தையும், இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.