பேஸ்புக் மூலம் கடல் கடந்து மலர்ந்த காதலால், சுற்றுலா விசாவில் சேலம் வந்த இலங்கை பெண், ஓமலூர் வாலிபரை திருமணம் செய்துகொண்டார்.

love marriage

பேஸ்புக் மூலம் கடல் கடந்து மலர்ந்த காதலால், சுற்றுலா விசாவில் சேலம் வந்த இலங்கை பெண், ஓமலூர் வாலிபரை திருமணம் செய்துகொண்டார்.  இத்திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதால், தடையில்லா சான்று கேட்டு எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் வயது 34 , சொந்தமாக பட்டுத்தறிக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, இலங்கை பருத்தித்துறை அருகேயுள்ள சூம்பளை தெற்கு பகுதியை சேர்ந்த ராசகுமார் மகள் 23 வயதாகும்  நிஷாந்தினி என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம், இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, அடிக்கடி போனில் பேசியுள்ளனர். அதில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக போனில் பேசி காதலை வளர்த்த நிலையில், காதலனை கரம் பிடிக்க முடிவு செய்த நிஷாந்தினி, கடந்த 15 நாட்களுக்கு முன் தனது தாயாருடன் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தார். சென்னை வந்திறங்கிய அவர், சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டியில் உள்ள காதலன் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு இரு குடும்பத்தாரும் சந்தித்து பேசினர். பிறகு கடந்த 7-ம் தேதி அங்குள்ள பெருமாள் கோயிலில் வைத்து, காதலன் சரவணனை நிஷாந்தினி கரம் பிடித்தார்.

இந்நிலையில் திருமணம் செய்த கையோடு, ஓமலூர் பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய சென்றனர். அங்கு சுற்றுலா விசாவில் வந்த பெண்ணின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது. திருமண விசாவில் வந்திருக்க வேண்டும் அல்லது தடையில்லா சான்று பெற்று வரவேண்டும் எனக்கூறி அனுப்பி விட்டனர். இதனிடையே, நிஷாந்தினியின் சுற்றுலா விசாவின் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருப்பதால், சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று, காதல் கணவனுடன் சென்ற நிஷாந்தினி, எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியதாவது, ''சேலம் ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரை பேஸ்புக் மூலம் 5 ஆண்டுகளாக காதலித்து, கடந்த 7-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டேன். நானும் எனது கணவருடன் இந்தியாவிலேயே இருக்க வேண்டியுள்ளதால், திருமணத்தை பதிவு செய்ய பதிவு அலுவலகம் சென்ற போது, காவல்துறை மூலம் தடையில்லா சான்று பெற்று வரும்படி கூறி விட்டனர். அதனால், நான் இங்கேயே கணவருடன் வாழ, தடையில்லா சான்று வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,'' என தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இலங்கை பெண், இங்குள்ளவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் இந்தியாவிற்கு வரும்போது திருமண விசாவில் வந்திருக்க வேண்டும். மாறாக சுற்றுலா விசாவில் வந்திருப்பதால், தற்போது அவர் மீண்டும் அவரது நாட்டிற்கு திரும்பவே சட்டம் சொல்கிறது. அதனால், முறைப்படி திருமண விசாவில் இந்தியா வந்து, இங்கு திருமணம் செய்துகொண்டு, முறையாக கணவருடன் வாழ இந்திய அரசிடம் குடியுரிமை பெற வேண்டும்.

இந்நிலையில் தற்போது வழங்கிய மனுவின் அடிப்படையில் முதலில் திருமணம் நடந்தது பற்றி விசாரிப்போம். பிறகு இதுதொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்போம்,'' என்றனர். கடல் கடந்த காதல், கைகூடிய நிலையில் சேர்ந்து வாழ முடியாத சட்ட சிக்கலை இலங்கை பெண் நிஷாந்தினி சந்தித்துள்ளார். அதில் இருந்து மீண்டு முறையாக காதல் திருமணம் செய்த இருவரும் வாழ வழி கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் உறவினர்கள் உள்ளனர்.