“ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது” அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள்.. எந்த ஆண்டு முதல் தெரியுமா?
By Aruvi | Galatta | May 15, 2021, 05:50 pm
“வரும் 2060 க்கு பிறகு ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது” என்று, அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இது தொடர்பாக ஷன்னா ஸ்வான் என்ற நோயியல் நிபுணர் கூறியுள்ள கருத்தில், “ மேல்நாட்டு ஆண்களின் உயிர் அணு எண்ணிக்கையான, கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது” என்பதற்கான ஆதாரங்களை அவர் அடுக்கு உள்ளார்.
அதன் படி, “அடுத்த ஒரு சில தலைமுறைகளிலேயே ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலுக்கு போதுமானதாக கருதப்படும் அளவைக் காட்டிலும் முற்றிலுமாக குறைந்து விடும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
குறிப்பாக, “ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கையின் சரிவானது, ஆண்டுக்கு 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை, ஏற்பட்டு வருகிறது” என்றும், நோயியல் நிபுணர் ஷன்னா ஸ்வான் கூறியுள்ளார்.
அதாவது, “ தற்போது உள்ள ஆண்கள் பெரும்பாலும், தங்களுடைய தாத்தாக்களிடம் இருந்த அளவில் பாதியளவு உயிர் அணுக்களை மட்டுமே தற்போது கொண்டிருக்கின்றனர்” என்று, அதற்கான ஆதாரங்களையும் அவர் காட்டுகிறார்.
“இந்த தரவுகள் அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு முன்னோக்கி விரிவுபடுத்தப்பட்டால், ஆண்களுக்கு வரும் 2060 ஆம் ஆண்டு முதல் இனப்பெருக்க திறன் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலே போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன” என்றும், அவர் எச்சரித்து உள்ளார்.
“இவை இனப்பெருக்க அசாதாரணங்களைக் கண்டறிந்து, உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளில் கருவுறுதல் குறைந்து வருவதற்கான ஆதாரங்களின் வளர்ச்சியால் ஆதரிக்கப்படுகின்றன என்றும், இவை மனித குல அழிவுக்கு வித்திடும் பேராபத்து இருப்பதாகவும், ஷன்னா ஸ்வான் எச்சரித்து உள்ளார்.
மேலும், “இப்படியான வாழ்க்கை முறை தொடரும் பட்சத்தில், 'மனித குலம் அழிந்துவிடுமா?' என்கிற கேள்விக்கு பதில் கூறுவது சற்று கடினம் என்றும், ஆனாலும் இந்த நிலைக்கு முக்கிய காரணிகளுள் ஒன்று நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றியிருக்கும் வேதிப்பொருட்கள் தான்” என்றும், அவர் அடிக்கோடிட்டுக் காட்டி உள்ளார்.
இதனால், “நம் இனப்பெருக்கத் திறனை காப்பாற்றிக்கொள்ளவும், இந்த உலகில் நம்முடன் இணைந்து பயணிக்கும் பிற உயிர்களையும் காப்பாற்ற வேதிப்பொருள் பிரச்சினையை நாம் சரியாக கையாளுவது காலத்தின் கட்டாயம்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
“ஆண்களிடையே உயிர் அணுக்கள் குறைந்துவருவது கண்டறியப்பட்டிருப்பது என்பது, இது முதல் முறையான நிகழ்வு அல்ல என்றும், கடந்த 1990 ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதல் முறையாக நம் கவனத்திற்கு இந்த விவகாரம் வந்தது என்றும், அப்போதே இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
“கடந்த 2017 ஆம் ஆண்டு மேலும் வலுவான ஆய்வு முடிவு ஒன்று ஆண்களிடையே உயிர் அணுக்கள் குறைந்து வருவதைப் புள்ளி விவரத்துடன் வெளியிடப்பட்டது என்றும், அதன் படி கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்கத்திய ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்துவிட்டதாகவும்” ஷன்னா ஸ்வான் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஆண்களின் விந்தணு குறைவு என்பது உடலுறவு கொண்டாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தைக் குறைத்து விடும் என்றும், நம்முடைய பேரக் குழந்தைகளிடையே இனப்பெருக்க திறன் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலே போகக்கூடும் நிலை தான் ஏற்படும் என்றும்” என்றும், அவர் கவலையுடன் கூறியுள்ளார்.
“வரும் 2045 ஆம் ஆண்டு முதல் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றால், உதவி இனப்பெருக்க முறைகளை கையாண்டாக வேண்டும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிக முக்கியமாக, “இனப்பெருக்க குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும், கடந்த 1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களிடையே ஏற்பட்ட வாழ்வியல் மாறுபாடு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும், இது தவிர நமது அன்றாட உணவு முறை, உடற்பயிற்சி செய்யாதது, உடல் பருமன், மது குடிப்பது போன்றவை உயிர் அணுக்கள் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும்” அவர் பட்டியலிட்டு உள்ளார்.
குறிப்பாக, மனிதர்களால் மாசுபடுத்தப்பட்ட ரசாயன மாசின் மூலம் சக உலகில் வாழ்ந்து வரும் மிருகங்களும் இனப்பெருக்க குறைபாட்டினை சந்தித்து வருவதாகவும், இது மனிதனுக்கு நாளை நிகழும் என்றும், ஷன்னா ஸ்வான் கவலையுடன் எச்சரித்து உள்ளார்.