3 குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு அரசு சலுகை :சீன அரசு அதிரடி!
3 குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு அரசு மானியம், வரிக்குறைப்பு, தந்தைவழி விடுப்பு அதிகரிப்பு என சீன அரசு அறிவித்துள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்ததை அடுத்து அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகளை பெற்று கொள்ள சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் கடந்த மே 11-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கடந்த 1950-க்கு பிறகு மக்கள் தொகை வளர்ச்சி பத்தாண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருப்பது கண்டறியப்பட்டது. சீனாவின் மொத்த மக்கள் தொகை 141.2 கோடியாகும். கடந்த 1976-2016 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு குழந்தை திட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனால் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்ததால் 2016-ல் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதன் காரணமாக, இளம் வயதினர் குறைந்து முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் சமூக, பொருளாதார, வேலைவாய்ப்பில் பல்வேறு எதிர்கால பிரச்னைகளை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என சீனா உணர்ந்தது. இதைத் தொடர்ந்து 2 குழந்தைகளுக்குப் பதிலாக 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இது சீனாவின் மிகப்பெரிய கொள்கை மாற்றாகும்.
மேலும் இப்புதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தம் தேசிய மக்கள் காங்கிரசின் (என்பிசி) நிலைக்குழு மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.
அதனைத்தொடர்ந்து பீஜிங், சிச்சுவான் மற்றும் ஜியாங்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மகப்பேறு விடுப்பு, திருமண விடுமுறையை நீட்டித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்து கொள்ள ஆண்களுக்கு விடுமுறை அதிகரிப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனால் சீன மக்களுக்கு மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த உறுதியாக இருக்கும் என நம்புவதாக சீன அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. மேலும் சீன மாகாண அரசின இந்த அறிவிப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.