“எனக்கு ‘அறிக்கை நாயகர்’ என்று பட்டம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘ஊழல் நாயகர்’, ‘கரப்ஷன் நாயகர்’, ‘கமிஷன் நாயகர்’, ‘கலெக்ஷன் நாயகர்’ என்று பட்டம் அளிக்கிறேன்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 3 ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக வேண்டுமென்றே திட்டமிட்டு நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவரது அறிக்கை வெளி வராத நாளே இல்லை. அவருக்கு அறிக்கை நாயகன் என்று பட்டமே தரலாம்!” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.
மேலும், “பச்சை பொய் கூறும் கனிமொழிக்கு பார்வையில் கோளாறு உள்ளது என்றும், திமுக குடும்ப கட்சி வாரிசு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றும், கார்ப்பரேட் கட்சியான திமுகவின் பெரிய தலைவர்கள் உள்ள நிலையில், இப்போது வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” என்றும், மிக கடுமையாக திமுக மீது முதலமைச்சர் விமர்சனங்கள் வைத்தார்.
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுத்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தைக் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆதரிக்கின்ற விதத்தில், மத்திய அரசு அந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்’ என்று வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம், ஆனால், இதில் அதிமுக அரசு தீவிரம் காட்டவில்லை” என்று, குற்றம்சாட்டினார்.
மேலும், “அவர்கள் ஊழலில், கொள்ளை அடிப்பதில், லஞ்சம் வாங்குவதில், கமிஷன் பெறுவதில், கரப்ஷன் செய்வதில் காட்டுகின்ற வேகத்தை இதில் காட்டியிருந்தால், நிச்சயமாக ஓரளவுக்கு சரி செய்திருக்க முடியும்” என்றும், கூறினார்.
“விவசாயப் பெருங்குடி மக்களெல்லாம் எங்களிடத்தில் சொன்னது, ‘தூர் எடுக்கிறோம், தூர் எடுக்கிறோம் என்று சொல்லி பெயருக்கு அறிவிப்பை விளம்பரத்தை செய்துவிட்டு காண்ட்ராக்ட் கமிஷன் அடித்து கொண்டிருக்கிறார்கள்” என்று விவசாயிகள் ஆதங்கப்பட்டதையும் ஸ்டான் மேற்கொள் காட்டினார்.
அத்துடன், “குடிமராமத்து பணியில் பெரிய அளவில் சாதனை செய்து விட்டோம்; அதற்காக விருது வாங்கி விட்டோம் என்று முதலமைச்சர் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், அந்த குடிமராமத்து பணியைப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலமாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கொடுமையான ஆட்சி தான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் இன்று மக்களிடத்தில் போய் எடுத்து பேசினால், முதலமைச்சருக்கு மிகவும் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையே இல்லை எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்’ என்கிறார். நாங்கள் அரசியல் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய நான் அதைத்தான் செய்ய முடியும்” என்றும், சுட்டிக்காட்டிப் பேசினார்.
குறிப்பாக, “எனக்கு பெரிய பட்டத்தையும் கொடுத்து இருக்கிறார் முதலமைச்சர். அது என்னவென்றால், நான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி ‘அறிக்கை நாயகர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார். மனப்பூர்வமாக அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிக்கை விடுவது தவறில்லை! எனவே, முதலமைச்சர் அந்தப் பட்டத்தைப் பெருந்தன்மையோடு கொடுத்திருக்கிறார். அதனை நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு பட்டம் கொடுத்துள்ள அவருக்கு நான் ஒரு பட்டம் கொடுக்க வேண்டாமா?!” என்று கேள்வி எழுப்பிய ஸ்டானின், “‘ஊழல் நாயகர்’, ‘கரப்ஷன் நாயகர்’, ‘கமிஷன் நாயகர்’, ‘கலெக்ஷன் நாயகர்’ இது தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தரக்கூடிய பட்டம்” என்றும், காட்டாக ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் அளித்துள்ள இந்த செய்தி, தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.