வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நாளை ஒடிசாவிலும், டிசம்பர் 5 ஆம் தேதி மேற்கு வங்காளத்திலும், டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
இந்தப் புயலின் போது காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வங்கக்கடலின் மையமேற்கு, தென்கிழக்கு மற்றும் மையகிழக்கு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு ‘ஜாவத்’ என பெயரிடப்பட்டுள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜாவத் என்ற பெயர் சவுதி அரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ஜாவத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். 'ஜாவத்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா கடற்கரை மார்க்கமாக செல்லும் 95 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை கருதியே ரத்து செய்யப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரைப்படி, சென்னை, காட்டுபள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மதுரை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.