“காங்கிரஸ் கட்சியில் இணைந்து 18 ஆண்டுகள் ஆகியும் மாநிலங்களவை வாய்ப்பு வழங்காதது ஏன்?” என்று, காங்கிரஸ் மீது நடிகை நக்மா பாய்ந்து உள்ளது பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் தற்போது காலியாக உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 உறுப்பினர்களுக்கான தேர்தலானது, வரும் ஜூன் 10 ஆம் தேதி அந்தந்த மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 31 ஆம் துதியான நாளையுடன் முடிவடைகிறது.
இதன் காரணமாக, ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை தற்போது ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வந்த நிலையில், கிட்டதட்ட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிட்டாகி உள்ளன.
அதன் படி, காங்கிரஸும் தங்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும் 10 வேட்பாளர்களுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டது.
இதில், தமிழகத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போட்டி இடுகிறார்.
அதே போல், சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகியோரும், ஹரியானா மாநிலத்தில் இருந்து அஜய் மாக்கன் போட்டியிருக்கிறார்கள்.
அத்துடன், கா்நாடகா மாநிலத்தில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இம்ரான் பிரதாப்கரி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இவர்களை பெயர்களை காங்கிரஸ் தலைமை வெளியிட்டு உள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில், நடிகை நக்மா பெயர் இடம் என்று, அக்கட்சியினர் கூறி வந்தனர். ஆனால், இந்த பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில், “வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெறாதது” குறித்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ள நடிகை நக்மா, தனது டிவிட்டர் பக்கத்தில் தனது அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த டிவிட்டர் பதிவில், “நான் கடந்த 2003-04 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது, நாங்கள் ஆட்சியில் இல்லை. அப்போது, தலைவர் சோனியா காந்தி, என்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதி அளித்தார்.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பிறகு, 18 வருடங்கள் ஆகி விட்ட போதிலும் இன்னும் ஒரு வாய்ப்பு எனக்கு அவர் தரவில்லை. ஆனால் மகாராஷ்டிரா மாநிலங்களவையில் இம்ரானுக்கு இடம் அளிக்கப்படுகிறது. நான் கேட்கிறேன், நான் என்ன குறைவான தகுதியுடையவளா?” என்று, நடிகை நக்மா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
முக்கியமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு ராஜ்யசபா எம்.பி. தேர்ந்தெடுகூடிய நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பளிக்காமல், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரானுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படுகிறது?” என்கிற ரீதியில் நடிகை நக்மா கேள்வி எழுப்பி டிவீட் செய்து உள்ளார்.
நடிகை நக்மாவின் இந்த டிவிட்டர் பதிவானது, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, நடிகை நக்மா பாஜகவில் சேர உள்ளதாகவும் இன்னொரு தகவல்கள் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.