ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் இரு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால், ராஜஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இணைய சேவைகளும் அதிரடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.
இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையானது, இன்றைய தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் படி, தமிழ்நாடு, ராஜஸ்தான் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடி மற்றும் ஒலிபெருக்கி பொருத்துவது தொடர்பாக, நேற்று இரவு அங்கு பெரும் மோதல் வெடித்தது. இதனால், இரு தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக, ஜலோரி வட்டம் அருகே பேனர் வைக்கப்பட்டு, ஒலிபெருக்கி பொருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால் முகுந்த் பிஸ்ஸாவின் சிலை மீது கொடி ஏற்றப்பட்டு, ஜலோரியில் உள்ள வட்டத்தில் ரமலான் தொடர்பான பேனர் கட்டப்பட்டதாகவும், இதனால் அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதாகவும் செய்திகள் வெளியானது.
இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த கொடி மற்றும் பேனரை அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்குள்ள மற்ற சமூகத்தினர் ஆத்திரமடைந்ததால், அங்கு இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக, அங்கு இரு சமூகத்தினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டனர் என்றும், இவற்றுடன் அங்கிருந்த வாகனங்கள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, அங்கு மோதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி உள்ளனர்.
இதனால், அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் இணையதள சேவையை போலீசார் அதிரடியாக நிறுத்தி உள்ளனர்.
அதே போல், கன்னியாகுமரியில் காவல் நிலையத்தின் வாசல் முன்பு, ரமலான் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால், கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.