வார்டு உறுப்பினராக பதவியேற்ற பாஜக பெண் பிரமுகரை, பதவியேற்பு விழாவில் வைத்தே கஞ்சா கடத்தல் வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கடந்த 12 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பதவியேற்பு விழாவும் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த சூழலில் தான், தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான 34 வயதான சூர்யா மீது, ஏற்கனவே பீர்க்கன்காரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட மொத்தம் 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த பிரபல ரவுடியான சூர்யாவிற்கு 32 வயதான மனைவி விஜயலட்சுமி, மற்றும் கோகுல் என்ற மகன், யுவஸ்ரீ என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.
இந்த சூழலில் தான், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் நேற்யை தினம் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நெடுங்குன்றம் பகுதியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமி கலந்துகொண்டு பதவியேற்றார்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அந்த பதவி ஏற்ப மேடையில் இருந்து விஜயலட்சுமி, கீழே இறங்கிய போது, அங்கு வந்த ஓட்டேரி காவல் நிலைய போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அங்கு கூடி நின்ற கூட்டத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், அங்கு கூடியிருந்த விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விஜயலட்சுமி தரப்பினர் பேசும்போது, “ஜனநாயக முறையில் மக்களின் ஆதரவோடு தேர்தலில் போட்டியிட்டு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை, கணவரின் பெயரை சொல்லி காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அராஜக செயல்” என்றும், அவர்கள் விமர்சனம் செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் விசாரித்த போது, “கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயலட்சுமி கஞ்சா விற்பனை செய்ததாகவும், அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாகவும்” விளக்கம் அளித்து உள்ளனர்.
அத்துடன், “தனது கணவர் பாஜகவில் சேர்ந்ததால், ஆளும் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு, தன்மீது பொய் புகார் கூறி கைது செய்துள்ளதாக” விஜயலட்சுமி தரப்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.