தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய இன்று தொடங்கி 5 நாட்களுக்கு மத்திய நிபுணர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 2-ந் தேதி இந்தியாவுக்குள்ளும் ஊடுருவிய ஒமிக்ரான் முதலில் கர்நாடகா மாநிலத்தில் தொடங்கி, தற்போது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி என 17 மாநிலங்களில் பரவிவிட்டது.
இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி டெல்லியில் 142 பேருக்கும், மகாராஷ்டிராவில் 141 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 43 பேருக்கும், தெலுங்கானாவில் 41 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 9 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், ஒடிசாவில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், உத்தரகாண்டில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 142 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 141 பேரில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட 34 பேரில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் ஒமிக்ரான் அறிகுறியுடன் உள்ள 42 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக கூறினார்.
அதன்படி ஒமிக்ரான் பாதிப்பில் முதல் 10 இடங்களில் உள்ள மாநிலங்களுக்கு இந்த மத்திய பன்னோக்கு குழு வர இருக்கிறது. அதில் 7-வது இடத்தில் உள்ள தமிழகத்திற்கு நேற்று இரவு பன்னோக்கு குழு வந்தது.
இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த வல்லுநர்கள் மருத்துவர் வினிதா, மருத்துவர் புர்பசா, மருத்துவர் சந்தோஷ்குமார், மருத்துவர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர். தமிழகத்தில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமிக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள்.
ஒமிக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில் மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 27 லட்சத்து 44 ஆயிரத்து 37 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 679 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றிலிருந்து உடல்நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 673 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்த 10 பேர் மரணமடைந்தனர்.
ஒரே நாளில் ஒரு லட்சத்து 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 6 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களைப் பொறுத்தவரையில், சென்னையில் அதிகபட்சமாக 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் 89 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும், ஈரோட்டில் 45 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.