திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவித்தது. திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பெரவையில் பேசுகையில், சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் சொத்து வரி உயர்வு குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் இருந்த நிலையில், சென்னை மக்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சென்னை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கான சொத்து வரியை, தோராயமான உயர்வை வெளியிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான வீட்டில் வசிக்கும் அடையாறு குடியிருப்பாளர், அரையாண்டு சொத்து வரியாக ரூ.1461 செலுத்தி வந்திருந்தால், இனி அவர்கள் அதிகபட்சமாக ரூ.2,922 வரி செலுத்த வேண்டும்.
சென்னையில் அதே அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான வீட்டில் வசிப்பவர் முந்தைய ரூ.308 சொத்து வரிக்கு பதிலாக இப்போது ரூ.462 செலுத்த வேண்டும். சென்னை ஆலந்தூரில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.320 சொத்து வரி செலுத்திய குடியிருப்பாளர்கள் இனி ரூ.400 செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.825 செலுத்தி வந்த நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.1,444 செலுத்த வேண்டும். சென்னை மாதவரத்தில் வசிப்பவர்கள் 600 சதுர அடிக்கு ரூ.275 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,900 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,310 சொத்து வரி செலுத்த வேண்டும்.
சென்னை திருவொற்றியூரில் 600 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு ரூ.264 வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1,288 வரி செலுத்த வேண்டும். அண்ணாநகர் மண்டலத்தில் 600 சதுர அடி வீடுகளுக்கு ரூ.461 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.2,970 வரி செலுத்த வேண்டும். ஆனால் இருப்பினும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் மாறுபட்ட வரி விதிக்காமல் அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் என்று சென்னையில் வீடு வைத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவாகவே சொத்து வரி வசூலிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி ரயில் நிலைய சந்திப்பு அருகே அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், பரஞ்ஜோதி, சிவபதி, வளர்மதி, நல்லுசாமி, முன்னாள் எம்.பி.கள் குமார், ரத்னவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கூடுதல் 5 அல்லது அதற்கு மேலாக நபர்கள், அதை கலைக்க கட்டளையிட்ட பின்னர் கூடுவது அல்லது தொடர்வது அரசு ஊழியர் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, பொதுப்பாதையில் கூடுவதற்கு தடை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 25 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, வெல்லமண்டி நடராஜன், பரஞ்ஜோதி, சிவபதி, வளர்மதி, நல்லுசாமி உள்ளிட்ட 25 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி சொத்து வரி உயர்வுக்கு போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.